search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேப்பனப்பள்ளி தொகுதி
    X
    வேப்பனப்பள்ளி தொகுதி

    வேப்பனப்பள்ளி தொகுதி கண்ணோட்டம்

    அதிமுக சார்பில் கே.பி. முனுசாமி, திமுக சார்பில் பி முருகன், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஜெயபால், நாம் தமிழர் கட்சி சார்பில் சக்திவேல், தேமுதிக சார்பில் முருகேசன் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
    அதிமுக வேட்பாளர் கே.பி. முனுசாமி சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 11,86,790
    2. அசையும் சொத்து- ரூ. 70,34,070
    3. அசையா சொத்து- ரூ. 8,18,00,000

    திமுக வேட்பாளர் பி. முருகன் சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 1,25,000
    2. அசையும் சொத்து- ரூ. 64,30,973
    3. அசையா சொத்து- ரூ. 2,63,49,536

    கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சிறப்பு மற்றும் கடைசி தொகுதியாக வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி திகழ்ந்து வருகிறது. தமிழகத்திலேயே தமிழகம், ஆந்திர மற்றும் கர்நாடக மாநிலங்களின் மூன்று மாநில எல்லைகளையும் கொண்ட ஒரே தொகுதி வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியாகும். இந்த தொகுதியில் சிறப்பு மிக்க வரலாற்று கோவில்கள் உள்ளன.

    வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் வேப்பனப்பள்ளி, சூளகிரி, ராயகோட்டை, உத்தனப்பள்ளி ஆகியவை முக்கிய நகரங்களாக உள்ளன.

    மேலும் தமிழகத்தில் எந்த ஒரு பேருராட்சி, நகராட்சி, மற்றும் மாநகராட்சி இல்லாமல் ஊராட்சிகளை மட்டுமே கொண்டுள்ள ஒரே தொகுதி வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியாகும். இத்தொகுதியில் சூளகிரி ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சிகள், வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில் உள்ள 24 ஊராட்சிகள், கெலமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 3 ஊராட்சிகள் என மொத்தம் 73 ஊராட்சிகளை கொண்டுள்ளது.

    வாக்காளர்கள்

    தற்போது வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 27 ஆயிரத்து 604 பேர் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 23 ஆயிரத்து 21 பேர் உள்ளனர். 3&ம் பாலினத்தனவர் 32 பேர் உள்ளனர். வேப்பனப்பள்ளி தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரத்து 657 பேர் உள்ளனர்.

    வேப்பனப்பள்ளி தொகுதி

    வேப்பனப்பள்ளி தொகுதியை பொருத்த வரையில் சாதிவாக்குகள்தான் அரசியல் கட்சிகளின் வெற்றியை நிரூபித்து வருகிறது.

    ஓசூர், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி ஆகிய வட்டங்களை கொண்ட இந்த தொகுதி மக்களின் பேசும் மொழியாக தமிழ், தெலுங்கு, உருது, கன்னடம், ஆங்கிலம் ஆகியவை உள்ளன. இந்துகள் அதிகமாக உள்ளனர். இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.

    கவுடா, ரெட்டி சமூகத்தினரும், ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்தவர்களும் கணிசமாக வசித்து வருகின்றனர், அதாவது இந்த தொகுதியில் கவுண்டர்கள் 20 சதவீதம், நாயுடுகள் 20 சதவீதம், மற்றும் ரெட்டியார், செட்டியார், பழங்குடியினர் 10 சதவிதம், ஆதிதிராவிடர் 15 சதவிதம் என வசித்து வருகின்றார்கள்.

    இந்த வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி 2011-ம் ஆண்டு முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் இருந்து 54-வது வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியாக பிரிக்கப்பட்டது. வேப்பனப்பள்ளி தொகுதி பரப்பளவில் மிகப்பெரியது ஆகும். 

    மாம்பழ உற்பத்தி

    இந்த தொகுதியில் மக்களின் வாழ்வாரம் விவசாயம் மட்டுமே. எங்கு சுற்றி திரும்பி பார்த்தாலும் பச்சை பசலேன்று விவசாயம் மட்டுமே காணப்படும். மேலும் தமிழகத்தின் மாம்பழத்தின் முதன்மை மாவட்டமாக திகழும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 50 சதவீத மாம்பழம் வேப்பனப்பள்ளி தொகுதியில் இருந்து தான் சாகுபடி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி பிரிக்கப்பட்ட 2011 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது. இதையடுத்து 2016 சட்ட மன்ற தேர்தலிலும் மீண்டும் தி.மு.க.வே வெற்றி பெற்றது.

    தொகுதி பிரச்சினைகள்

    முற்றிலும் கிராமங்கள் சூழ்ந்துள்ள வேப்பனப்பள்ளி தொகுதியில் போதிய சாலை வசதியும், பஸ் வசதியும் திருப்திகரமாக இல்லை. இங்கு வசிக்கும் மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் இருந்தாலும் பாசனத்துக்கான நீர் மேலாண்மை திட்டங்கள் ஏதும் இல்லாததால் வானம் பார்த்த பூமியாகவே காட்சியளிக்கிறது.

    இதனால் இந்த தொகுதி மக்கள் விவசாயத்தை கைவிட்டு ஓசூரில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்த்து வருகிறார்கள்.

    விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்ய இருசக்கர வாகனத்திலேயே ஓசூர், கிருஷ்ணகிரி , சூளகிரி ஆகிய சந்தைகளுக்கு பயணிக்கும் நிலை இருந்து வருகிறது. இத்தொகுதி யில் உள்ள ஜீனூரில் 400 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலை பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு இன்று வரை கிடப்பில் உள்ளது.

    வேப்பனப்பள்ளி தொகுதி

    சிங்கிரிப் பள்ளி அணை திட்டம் நிறைவேற்றப் படாமல் உள் ளது. வேப்பனப்பள்ளி தொகுதியில் கல்லூரியோ, தொழிற்சாலையோ இல்லை. இதனால் கல்விக்காகவும், வேலைக்காகவும் இத்தொகுதி மக்கள் நீண்டதூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே முத்தாலி, அளியாளம், சுபகிரி ஆகிய 3 இடங்களில் சிறு தடுப்பணைகள் கட்டி, இந்த தொகுதியில் உள்ள ஏரிகளில் நீர் நிரப்ப வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.
    ஆந்திரா, கர்நாடக மாநில வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் யானை கூட்டத்துக்கு வேப்பனப்பள்ளிதான் வழித்தடமாக உள்ளது, இவ்வாறு யானைகள் செல்லும் போது விவசாய பயிர்களை நாசமாக்கி விடுகின்றன. மேலும் சில சமயங்களில் யானைகளால் உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    வேப்பனப்பள்ளி தொகுதியில் அனைத்து பகுதிகளும் ஊராட்சிகளாக இருந்து வருவதால் வளர்ச்சி அடையாத தொகுதியாக உள்ளது. குறிப்பாக தொகுதி மக்களின் குடிநீர் பிரச்சினை, பஸ் வசதி, அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை இன்னும் பல கிராமங்களில் இல்லாத நிலை உள்ளது.

    வேப்பனப்பள்ளி, சூளகிரி, ராயக்கோட்டை ஆகிய ஊராட்சிகளை பேரூராட்சிகளாக மாற்ற வேண்டும். அதிக விபத்துகள் ஏற்படும் சூளகிரியில் தீயணைப்பு நிலையம் ஏற்படுத்த வேண்டும்.

    இதேபோல் வேப்பனப் பள்ளி, சூளகிரி ஆகிய பகுதிகளில் விவசாயம் பிரதானமாக தொழிலாக உள்ளது. மேலும் இந்த தொகுதிகளில் காய்கறிகள் உற்பத்தியும், ஏற்றுமதியும் அதிகளவில் இருந்து வருகிறது. இதனால் விவசாயிகள் பயன்படும் வகையில் சந்தைகள் அமைக்கப்பட வேண்டும் என்று தொகுதி மக்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.

    இந்த தொகுதியில் மாம்பழ உற்பத்தி அதிகமாக உள்ளதால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் புதிதாக மாழ்பழ கூழ் தொழிற்சாலை அமைக்கப்பட வேண்டும்.
    Next Story
    ×