search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆத்தூர் தொகுதி
    X
    ஆத்தூர் தொகுதி

    ஆத்தூர் தொகுதி கண்ணோட்டம்

    சேலம் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் ஏ.பி. ஜெயசங்கரனும், திமுக சார்பில் கு. சின்னதுரையும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
    ஏ.பி. ஜெயசங்கரன் சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ, 4,00,000
    2. அசையும் சொத்து- ரூ. 20,06,571
    3. அசையா சொத்து- ரூ. 60,00,000

    கு. சின்னதுரை சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ, 1,00,000
    2. அசையும் சொத்து- ரூ. 4,37,501
    3. அசையா சொத்து- ரூ. 90,10,000

    சேலம் மாவட்டத்திலுள்ள முக்கிய நகராட்சிகளின் ஒன்றான ஆத்துரை தலைமையிடமாக கொண்டு ஆத்தூர் தனி தொகுதி அமைந்துள்ளது. இத்தொகுதியில் ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிகள், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், கீரிப்பட்டி பேரூராட்சிகள் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர் வருவாய் வட்டத்திற்குட்பட்ட பெரும்பாலான கிராமங்களும் இடம் பெற்றுள்ளன.

    இத்தொகுதியில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புமே முக்கிய தொழில்களாக உள்ளன. இங்கு வாழை, மரவள்ளி, மஞ்சள், பருத்தி, நெல், வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. இதுதவிர, பாக்கு மரம் வளர்ப்பிலும் விவசாயிகள் அதிகளவில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இப்பகுதி கிராமப்புற மக்களுக்கு மரவள்ளி அரவை ஆலைகள், நூற்பாலைகள் மற்றும் நெல் அறுவடை எந்திரங்களும் வேலைவாய்ப்பு வழங்குகின்றன. இத்தொகுதி ஜவ்வரிசி உற்பத்தியில் மாவட்ட அளவில் முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கதாகும். இருப்பினும் மரவள்ளி அரவை ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் சுற்றுச்சூழலுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

    இந்த தொகுதியில் ஆண்கள்: 1,22,440. பெண்கள்: 1,31,348. திருநங்கைகள் 12 என மொத்தம்: 2,53,800 வாக்காளர்கள் உள்ளனர்.

    ஆத்தூர் தொகுதியில் இதுவரை நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 5 முறையும், அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தலா 4 முறையும், சுயேச்சை வேட்பாளர்கள் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். அதாவது, சுதந்திரத்திற்கு பின்பு 1952 மற்றும் 1957-ல் நடந்த 2 தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

    கோரிக்கைகள்

    மேட்டூர் காவிரி உபரிநீரை ஆத்தூர் பகுதியில் உள்ள வசிஷ்டநதியில் இணைக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். அதேபோல், ராமநாயக்கன்பாளையம் கல்லாற்றின் குறுக்கே கல்லணை கட்டினால் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும் என்று விவசாயிகள் கருதுகின்றனர். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் புதிய தொழிற்சாலைகள் ஏற்படுத்த வேண்டும். அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அரசு மகளிர் கலைக்கல்லூரி அமைக்க வேண்டும்.

    இத்தொகுதிக்கு உட்பட்ட புத்திரகவுண்டன்பாளையம், உமையாள்புரத்தில் தொழிற்பேட்டை அமைக்கப்படுமென அறிவிக்கப்பட்டு முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டிருந்தாலும், ஆத்தூர் பகுதியில் தொழிற்பேட்டை அமைத்து வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கை இதுவரை நிறைவேறவில்லை.

    ஆத்தூரில் புறவழிச்சாலை அமைத்து 8 ஆண்டுகள் ஆகியும் இதுவரை இருவழிச்சாலையாகவே உள்ளது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண புறவழிச்சாலையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். குறிப்பாக சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து ஆத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பது ஆத்தூர் தொகுதி மட்டுமின்றி அதன் சுற்றுவட்டார மக்களின் பல ஆண்டு கோரிக்கையாகும். இதுபோன்ற நீண்ட கோரிக்கை பட்டியலுடன் தொகுதி மக்கள் வருகிற 2021 சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

    ஆத்தூர் தொகுதி
    ஏ.பி. ஜெயசங்கரன், கு. சின்னதுரை

    கழிவுநீர் சுத்திகரிப்புக்கு சிறப்பு திட்டத்தை ஏற்படுத்தி வசிஷ்டநதியை தூய்மைபடுத்த வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளில் ஒன்றாக உள்ளது. இதே போல் மரவள்ளி அரவைஆலைகள் வெளியேற்றும் கழிவுகளையும் சுத்திகரித்து சுற்றுச்சூழலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் இப்பகுதி மககளின் எதிர்பார்ப்புகளில் ஒன்றாகும்.

    விழுப்புரத்திற்கு பிறகு சேலம் வரை அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு தலைமை மருத்துவமனை இல்லாததால் விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கு கூட சேலம் அரசு மருத்துவமனைக்கே செல்ல வேண்டிய நிர்பந்தம் நீடித்து வருகிறது. ஆத்தூர் அரசு மருத்துவமனையை நவீன வசதிகளுடன் தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்திடவும், இத்தொகுதிக்கு உட்பட்ட ஏத்தாப்பூரில் முடங்கி கிடக்கும் தொழுநோய் மறுவாழ்வு மைய வளாகத்தில்,தேசிய நெடுஞ்சாலை விபத்து மற்றும் அவசர சிகிச்சை நவீன மருத்துவனை அமைக்கும் திட்டத்தையும் நிறைவேற்ற இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

    ஆத்தூர் தொகுதியில் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும். காமராஜனார் சாலையும், சேலம் சாலையும் இணையும் பகுதி மற்றும் மஞ்சினி செல்லும் சாலையில் குறுக்கிடும் சேலம்&விருத்தாச்சலம் ரயில்வே கேட் பகுதியிலும் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, மேம்பாலங்கள் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதும் இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கைகளாக இருந்து வருகிறது.

    அதிமுக சார்பில் ஏ.பி. ஜெயசங்கரன், திமுக சார்பில் கு. சின்னதுரை, சரத்குமார் கட்சி சார்பில் ஏ.பி. சிவா, மக்கள் நீதி மய்யம் சார்பில் கிருஷ்ணவேணி, அமமுக சார்பில் எஸ். மாதேஸ்வரன் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    இதுவரை வெற்றி பெற்றவர்கள்  விவரம்:-

    1951 பி. சுப்ரமணியம்- சுயேச்சை
    1957 இருசப்பன்- சுயேச்சை
    1962 எஸ். அங்கமுத்து நாயக்கர்- காங்கிரஸ்
    1967 கே. என். சிவபெருமாள்- தி.மு.க.
    1971 வி. பழனிவேல் கவுண்டர்- தி.மு.க. 
    1977 சி. பழனிமுத்து- காங்கிரஸ்
    1980 சி. பழனிமுத்து- காங்கிரஸ்
    1984 சி. பழனிமுத்து- காங்கிரஸ்
    1989 எ.எம். ராமசாமி- தி.மு.க.
    1996- எ.எம். ராமசாமி- தி.மு.க. 
    1991- வி. தமிழரசு- அ.தி.மு.க. 
    2001- எ.கே. முருகேசன்- அதிமுக. 
    2006- எம். ஆர். சுந்தரம், காங்கிரஸ்
    2011- சு. மாதேஸ்வரன், அ.தி.மு.க. 
    2016- ஆர்.எம். சின்னதம்பி, அ.தி.மு.க.

    2016 தேர்தல்

    சின்னதம்பி அதிமுக- 82,827
    எஸ்.கே.அர்த்தநாரி காங்.- 65,493
    அம்சவேணி பாமக- 18,363
    ஆதித்யன் விசிக- 8,532
    ஜெயசீலன் கொமதேக- 2,413
    செல்லதுரை ஐஜேகே- 1,747
    சதீஷ்பாபு நாம் தமிழர்- 1,531
    மாரியப்பன் பிஎஸ்பி- 947
    விஜயராகவன் சுயேச்சை- 718
    லட்சுமணன் சுயேச்சை- 395
    அருண் சுயேச்சை- 349
    பெரியசாமி சுயேச்சை- 283
    முருகேசன் எஸ்பி- 247
    பாக்கியராஜ் சுயேச்சை- 201
    Next Story
    ×