search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பூர் தொகுதி
    X
    பெரம்பூர் தொகுதி

    திமுக- அதிமுக கூட்டணி கட்சி மோதும் பெரம்பூர் தொகுதி கண்ணோட்டம்

    திமுக சார்பில் எம்எல்ஏ-வாக உள்ள ஆர்.டி.சேகரும் - அதிமுக கூட்டணியில் உள்ள பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என். ஆர்.தனபாலனும் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
    சென்னை மாவட்டத்திலேயே மிகப்பெரிய தொகுதி என்ற அந்தஸ்தை இந்த சட்டசபை தேர்தலில் பெரம்பூர் தொகுதி பெற்றுள்ளது. இதுவரையில் வேளச்சேரி தொகுதியே பெரிய தொகுதியாக இருந்தது. புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதில் பெரம்பூர் தொகுதியில் மொத்தம் 3 லட்சத்து 15 ஆயிரத்து 208 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்கள் 1,55,049 பேரும், பெண்கள் 1,60,088 பேரும், 3-ம் பாலினத்தவர் 71 பேரும் உள்ளனர்.

    பெரம்பூர் தொகுதி

    வடசென்னை பாராளுமன்ற தொகுதியில் பெரம்பூர் சிறப்புமிக்க தொகுதியாக கருதப்படுகிறது. இத்தொகுதியில் மூலக்கடை, கொடுங்கையூர், கண்ணதாசன் நகர், மகாகவி பாரதியார் நகர், வியாசர்பாடி, பார்வதி நகர் போன்ற பகுதிகள் இடம் பெற்றுள்ளன.

    எஸ்.சி. மற்றும் வன்னியர்கள் அதிகம் வசிக்கிறார்கள். நாடார், தேவர், நாயுடு, உடையார், மர்ம தமிழர்களும் குறிப்பிடப்படும் அளவில் உள்ளனர்.

    பெரம்பூர் தொகுதி

    இத்தொகுதியில் தி.மு.க. 8 முறை தேர்தலை சந்தித்து வாகை சூடியுள்ளது. 2017-ம் ஆண்டு பி. வெற்றிவேல் எம்.எல்.ஏ. தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து 2019-ல் இடைத் தேர்தல் நடத்தப்பட்டு தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி. சேகர் வெற்றி பெற்றார். இதன் மூலம் தி.மு.க.18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த தொகுதியை கைப்பற்றியுள்ளது. 

    இந்த தேர்தலில் தொகுதியை தக்க வைத்து கொள்ள, மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு ஆர்.டி.சேகர் மிக முக்கியத்துவம் கொடுத்தார். தெருவிளக்கு, குடிநீர், கழிவுநீர் அடைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளை தொலைபேசி வழியாகவும், ஆன்லைன் புகார் மூலமாகவும் பெற்று உடனடியாக நடவடிக்கை எடுத்தார். தொகுதியில் அனைத்து சமூகத்தினரும் பரவலாக வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வந்ததால் இந்த தொகுதியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இருந்தனர். ஆனால் தற்போது அந்த தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் வேலை வாய்ப்பு, குறைந்துள்ளது.

    டாக்டர் அம்பேத்கர் அரசு கலை அறிவியல் கல்லூரி ஒன்றும் 3 தனியார் கலை அறிவியல் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. சிறுதொழில்கள் அடங்கிய சிட்கோவும் இடம்பெற்றுள்ளன.

    பெரம்பூர் தொகுதி

    பொதுமக்களின் முக்கிய பொழுதுபோக்கு மையமாக பெரம்பூர் மாநகராட்சி பூங்கா மட்டுமே உள்ளது. வடசென்னையில் முக்கிய தொழில் நிறுவனங்கள் மிகுந்த பகுதியாக பெரம்பூர் விளங்குகிறது. ஆனால் பெரிய அளவிலான வளர்ச்சிக்கு வித்திடக்கூடிய பிரதான தொழில்கள், தொழிற்சாலைகள் எதுவுமில்லை. கூலி தொழிலாளர்கள் நிறைந்த தொகுதியாகும்.
    தொகுதியின் பிரச்சினையாக கொடுங்கையூர் குப்பை கிடங்கு உள்ளது.

    சுற்றுச்சூழல் மாசுபடுவதால், அதனை அங்கிருந்து மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக மக்கள் போராடி வருகின்றனர். ஆனாலும் இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படவில்லை. அதற்கு மாறாக நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டத்தை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது. குப்பைகளை தரம்பிரித்து அதில் இருந்து உரம் தயாரிக்கப்படுகிறது.

    பெரம்பூர் தொகுதி

    மழைக்காலங்களில் குப்பை கிடங்கும் பக்கிங்காம் கால்வாய் கழிவுநீரும் இந்த பகுதி மக்களின் பொது சுகாதாரத்தை பாதிப்படையக் செய்கிறது. கால்வாய் நிரம்பி வெள்ளமாக பெருக்கெடுத்து வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தை கடப்பது என்பது பெரும் சவாலாக உள்ளது.

    மேலும் இந்த தொகுதியில் வசிக்கும் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய கல்லறை தோட்டம் இல்லாத பிரச்சினை இருந்து வருகிறது. மறைந்த வெற்றிவேல் எம்.எல்.ஏ. இதற்கான முயற்சி எடுத்தார். தி.மு.க. எம்.எல்.ஏ. ஆர்.டி. சேகரும் தொடர்ந்து வலியுறுத்தினார்.

    மேலும் வடசென்னை அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் இதற்கான முழு முயிற்சி மேற்கொண்டு கடந்த மாதம் மாநகராட்சி சார்பில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு தலா ஒரு ஏக்கர் வீதம் மொத்தம் 3 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    அந்த இடத்தினை சமப்படுத்தி சிறுபான்மையின மக்களுக்கு பயன்பெற விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

    பெரம்பூர் தொகுதி

    கழிவு நீர் கால்வாய் ஓடுவதால், கொசுத்தொல்லையும், துர்நாற்றமும் இத்தொகுதியில் தீர்க்கப்படாத பிரச்சினையாக இருந்து வருகிறது. போக்குவரத்து பெருகி, உள்ள நிலையில் பெரிய சாலைகள் எல்லாம் ஆக்கிரமிப்பு மூலம் குறுகியதாக மாறிவிட்டன. அவற்றை அகற்றினால் தொகுதியில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சீராகும் என்பது பொதுமக்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.

    இந்த தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினர்களாக வரக்கூடியவர்கள். சாலை விரிவாக்கம், கொடுங்கையூர் குப்பை கிடங்கை இடம் மாற்றம் செய்தல் அல்லது புதிய திட்டம் மூலம் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுத்தல். குடிநீர், சிறுதொழில் வளர்ச்சிக்கு வழி வகுத்திட புதிய திட்டங்கள் வகுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கியமான தேவைகளை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.

    இந்த தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என். ஆர்.தனபாலனை எதிர்த்து, தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் களம் இறங்குகிறார். அ.ம.மு.க. வேட்பாளர் லட்சுமி நாராயணன், மக்கள் நீதி மய்யம் பொன்னுசாமி, நாம் தமிழர் மெர்லின் சுகந்தி ஆகியோர் களத்தில் உள்ளனர்.

    2019 இடைத்தேர்தல் முடிவு

    ஆர்.டி.சேகர் (தி.மு.க.)- 1,06,394
    ஆர்.எஸ்.ராஜேஷ் (அ.தி.மு.க.)- 38,371
    பிரியதர்ஷிணி (மக்கள் நீதி மய்யம்)- 20,508
    மெர்லின் சுகந்தி (நாம் தமிழர் கட்சி)- 8,611
    வெற்றிவேல் (அ.ம.மு.க.)- 6,281

    இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:-

    பெரம்பூர் தொகுதி இதுவரை

    1952- எஸ்.பக்கிரிசாமிபிள்ளை (சோஷியலிஸ்ட் கட்சி)
    1957- சத்தியவாணி முத்து (சுயேட்சை) 
    1957- எஸ்.பக்கிரிசாமிபிள்ளை (சுயேட்சை)
    1962- டி.சுலோசனா (இந்திய தேசிய காங்கிரஸ்)
    1967- சத்தியவாணி முத்து (தி.மு.க.)
    1971- சத்தியவாணி முத்து (தி.மு.க)
    1977- எஸ்.பாலன் (தி.மு.க.)
    1980-- எஸ்.பாலன் (தி.மு.க.)
    1984 பரிதி இளம்வழுதி (தி.மு.க)
    1989- செங்கை சிவம் (தி.மு.க.)
    1991- எம்.பி.சேகர் (அ.தி.மு.க.)
    1996- செங்கை சிவம் (தி.மு.க.)
    2001- கே.மகேந்திரன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)
    2006- கே.மகேந்திரன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)
    2011- ஏ.சவுந்தரராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)
    2016- வெற்றிவேல் (அ.தி.மு.க.)
    2019 ஆர்.டி.சேகர் (தி.மு.க.) (இடைத்தேர்தல்)
    Next Story
    ×