என் மலர்
செய்திகள்

கிரெடிட் கார்டு பிழை: 40,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்பிளஸ் அறிவிப்பு
ஒன்பிளஸ் வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு தகவல்கள் அம்பலமான குற்றச்சாட்டுக்கு ஒன்பிளஸ் பதில் அளித்திருக்கிறது.
புதுடெல்லி:
ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பொருட்களை வாங்கிய வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டுகளில் சந்தேகத்திற்கிடமான பரிமாற்றங்கள் நடைபெறுவதாக பலர் குற்றஞ்சாட்டியிருந்தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட ஒன்பிளஸ் 40,000 பேர் இந்த பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.
ஒன்பிளஸ் வலைத்தளத்தில் இருந்த மால்வேர் கோடு இதற்கு காரணமாக அமைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்களது கம்ப்யூட்டர்களில் ஒன்று பாதிக்கப்பட்டிருக்கிறது, இதில் இணைக்கப்பட்டிருக்கும் கோட் வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் கிரெடிட் கார்டு தகவல்களை திருடியுள்ளது. என ஒன்பிளஸ் அதிகாரி அந்நிறுவன வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
நவம்பர் மாத மத்தியில் இருந்து ஜனவரி 11-ம் தேதி வரை ஒன்பிளஸ் வலைத்தளத்தில் கிரெடிட் கார்டு தகவல்களை பதிவு செய்த வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. ஏற்கனவே சேமிக்கப்பட்ட கிரெடிட் கார்டு தகவல் அல்லது பேபால் கிரெடிட் கார்டு கொண்டோ அல்லது பேபால் கணக்கில் இருந்து பணம் செலுத்தியவர்கள் இந்த பாதிப்பில் சிக்கயிருக்க வாய்ப்பு கிடையாது என தெரிவித்துள்ளது.
இதுபோன்ற பிரச்சனை ஏற்பட்டதற்கு மன்னிப்பு கோர முடியாது. வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு எங்களுக்கு வலியை ஏற்படுத்தியுள்ளது. விவரம் அறிந்து, விழிப்புடன் இருக்கும் இத்தகைய வாடிக்கையாளர்களை பெற்றிருப்பதற்கு நன்றியுடன் இருப்போம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களை நேரடியாக தொடர்பு கொண்டு, உள்ளூர் அதிகாரிகளுடன் விவரத்தை அறிந்து கொண்டு பிரச்சனையை சரி செய்ய தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் என்றும் தெரிவித்திருக்கிறது.
இந்த விவகாரத்தில் சிக்கியிருக்கும் வாடிக்கையாளர்கள் தங்களது கிரெடிட் கார்டில் இருந்து பணம் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தால், வங்கியை தொடர்பு கொண்டு தங்களது பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.
Next Story






