என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆதாரங்கள் அனைத்தையும் சிபிஐ-யிடம் ஒப்படைத்துள்ளோம்: ஆதவ் அர்ஜூனா
- எங்களிடம் இருந்த அனைத்து ஆதாரங்களையும் சிபிஐ-யிடம் ஒப்படைத்து உள்ளோம்.
- கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் விசாரணை சரியாக சென்று கொண்டிருக்கிறது.
கரூரில் நடந்த த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின்போது 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
முதற்கட்ட விசாரணை கரூரில் நடந்தது. விசாரணையில் த.வெ.க. பொதுச் செயலாளர் என். ஆனந்த், சி.டி. நிர்மல் குமார் மற்றும் த.வெ.க. நிர்வாகிகளிடமும் போலீஸ் அதிகாரிகளிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தனர்.
அடுத்தகட்ட விசாரணைக்காக த.வெ.க. நிர்வாகிகள் புதுடெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து கடந்த 3 நாட்களாக நடந்த விசாரணையில் த.வெ.க. பொதுச் செயலாளர் என். ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, சி.டி. நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் கரூர் கலெக்டர் தங்கவேலு, போலீஸ் சூப்பிரண்டு ஜோஸ் தங்கையா மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இந்த நிலையில் சி.பி.ஐ. விசாரணைக்கு ஆஜரானது குறித்து ஆதவ் அர்ஜூனா கூறுகையில் "எங்களிடம் இருந்த அனைத்து ஆதாரங்களையும் சிபிஐ-யிடம் ஒப்படைத்து உள்ளோம். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் விசாரணை சரியாக சென்று கொண்டிருக்கிறது. கரூர் சம்பவத்தில் உண்மை வெளியே வர வேண்டும். எங்கள் குடும்பத்தில் 41 பேரை இழந்துள்ளோம். உண்மைக்காக போராடி வருகிறோம்.
அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு அறிவில்லாத துறையை கொடுக்க வேண்டும். சுகாதாரத்துறையை கொடுத்து அரசை அவமானப்படுத்த வேண்டாம்" என்றார்.






