என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 65 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு- 11 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை
- கர்நாடகாவில் இருந்து உபரிநீர் திறப்பு நேற்று காலை முதல் அதிகரிக்கப்பட்டது.
- இன்று காலை முதல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையின் தீவிரத்தை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.
கடந்த சில நாட்களாக நீர்வரத்தை விட அதிகளவில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 111 அடியாக குறைந்து காணப்பட்டது.
இதற்கிடையே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் உபரிநீர் வரத்தும் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து கடந்த 20-ந் தேதி இந்தாண்டில் 7-வது முறையாக அணை நிரம்பியது.
அதே நேரத்தில் கர்நாடகாவில் இருந்து உபரிநீர் திறப்பு நேற்று காலை முதல் அதிகரிக்கப்பட்டது. அந்த தண்ணீர் நேற்று மதியம் முதல் மேட்டூர் அணைக்கு வரத்தொடங்கியது. இதையடுத்து அணையில் இருந்து உபரிநீர் வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டது. இதனால் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர் ஆகிய 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை முதல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. 12 மணி அளவில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 65ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது.






