என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 78 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
    X

    ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 78 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

    • கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியது.
    • ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மெயின் அருவி சினிபால்ஸ் உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    கர்நாடக மற்றும் கேரளா மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியது.

    இதன் காரணமாக இந்த 2 அணைகளில் இருந்தும் பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

    அதன்படி கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 51 ஆயிரத்து 110 கனஅடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீரும் என மொத்தம் வினாடிக்கு 81 ஆயிரத்து 110 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. மதியம் 12 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

    இந்த நீர்வரத்து மேலும் அதிகரித்து இரவு 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 88 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மெயின் அருவி சினிபால்ஸ் உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    இந்த நிலையில் நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. அதன்படி இன்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 78 ஆயிரம் கனஅடி தண்ணீர் குறைந்து வந்தது.

    இதனால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ் உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. பாறைகளே தெரியாத அளவுக்கு ஐந்தருவிகளை முழ்கடித்தவாறு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையின் மீது 3 அடி உயரத்திற்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நடைபாதைக்கு செல்லும் நுழைவு வாயிலை போலீசார் பூட்டி சீல் வைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள்.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் 3-வது நாளாக பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவில் உபரிநீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அளவீடு செய்து கண்காணித்து வருகிறார்கள்.

    Next Story
    ×