என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விக்டோரியா அரங்கம் இன்று முதல் பார்வையிட அனுமதி - முன்பதிவு அவசியம்
    X

    விக்டோரியா அரங்கம் இன்று முதல் பார்வையிட அனுமதி - முன்பதிவு அவசியம்

    • முன்பதிவு மூலம் மட்டுமே பார்வையாளர்கள் விக்டோரியா பொது அரங்கத்தினைப் பார்வையிட அனுமதிக்கப்படுவர்.
    • விக்டோரியா பொது அரங்கின் கலை அரங்கமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.

    ரூ.32.62 கோடி மதிப்பீட்டில் தொன்மை மாறாமல் புனரமைக்கப்பட்ட விக்டோரியா பொது அரங்கத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 23-ந்தேதி திறந்து வைத்தார்.

    சென்னையின் அடையாளமாகத் திகழும் விக்டோரியா பொது அரங்கம் 1887-ம் ஆண்டு ராணி விக்டோரியாவின் வைர விழாவை நினைவு கூர்ந்து கட்டப்பட்டது. இந்த அரங்கம் சென்னையின் சமூக, பண்பாட்டு வரலாற்றின் முக்கிய சாட்சியாக விளங்குகிறது. முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த அரங்கம், தற்போது அருங்காட்சியகமும், கலை மேடையும் கொண்ட ஒரு பொது பண்பாட்டு தளமாக மாற்றப்பட்டுள்ளது.

    விக்டோரியா பொது அரங்கத்தின் தரைத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியானது, அரங்கம் கட்டுவதற்கு உதவிய ஆதரவாளர்கள், கட்டிடக் கலைஞர், ஒப்பந்ததாரர், இங்கு உரையாற்றிய தலைவர்கள், நீதிக்கட்சியின் எழுச்சி, நாடகமும் சினிமாவும், விளையாட்டுகளின் வரலாறு ஆகியவற்றை விரிவாகப் பதிவு செய்கிறது. வெளிப்புறப் பகுதியில் டிராம் வண்டி, தொல்லியல் காட்சிப் பகுதி ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.

    * பொதுமக்கள் அனுமதி : விக்டோரியா பொது அரங்க அருங்காட்சியகக் கண்காட்சியை இன்று முதல் பொதுமக்கள் பார்வையிடலாம்.

    * முன்பதிவு முறை: சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளமான [https://chennaicorporation.gov.in/gcc/] மூலம் VICTORIA PUBLIC HALL என்பதைத் தேர்வு செய்து முன்பதிவு செய்ய வேண்டும்.

    * கட்டணம்: இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட எவ்விதக் கட்டணமும் இல்லை.

    * முக்கிய நிபந்தனை: இணையதளத்தில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

    * நேரம்: காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை பார்வையிடலாம்.

    * பார்வையாளர்கள் எண்ணிக்கை: ஒவ்வொரு ஒன்றரை மணி நேர இடைவெளிக்கும் அதிகபட்சமாக 60 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

    * கலை அரங்கம்: விக்டோரியா பொது அரங்கின் கலை அரங்கமும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டுள்ளது. இதற்கும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும்.

    * நிகழ்ச்சிகளுக்கான அனுமதி: கலை மற்றும் பொதுவான நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். பதிவு செய்த பிறகு, நிகழ்ச்சியின் நோக்கத்தைப் பொறுத்து அனுமதி உறுதி செய்யப்படும்.

    Next Story
    ×