என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

துணை குடியரசு தலைவர் நாளை ராமேசுவரம் வருகை- டிரோன்கள் பறக்க தடை
- காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளனர்.
- 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
ராமேசுவரம்:
காசி தமிழ் சங்கம் 4.0 நிறைவு விழா நாளை ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆலயம் விடுதி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் இந்திய துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதையடுத்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் சிம்ரன் ஜித் சிங் காலோன், காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் மற்றும் மத்திய மாநில உளவுத்துறை, பாதுகாப்பு துறை உயர் மட்ட அதிகாரி குழு ஆலயம் விடுதியில் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், தமிழ் சங்கமம் நிறைவு விழா நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இந்திய துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை மாலை 3:30 மணி அளவில் மண்டபத்தில் உள்ள பொதுப்பணித்துறை ஹெலிபேட் தளத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கி, அங்கிருந்து சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை வந்தடைந்து, ஒரு மணி நேரம் நிகழ்வில் கலந்து கொள்கிறார்.
பின்னர் மீண்டும் சாலை மார்க்கமாக சென்று மண்டபம் ஹெலிபேட் தளத்தில் இருந்து 5 மணிக்கு புறப்பட்டு செல்கிறார். துணை குடியரசு தலைவர் சாலை மார்க்கமாக வரும் போது மதுரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் மண்டபத்திலிருந்து ராமேசுவரம் வரையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டு, குடியரசு துணை தலைவர் நிகழ்ச்சி மேடையை வந்தடைந்த உடன் மீண்டும் போக்குவரத்து தொடங்கப்படும்.
அதேபோல் மீண்டும் அவர் புறப்பட்டு செல்லும் போது போக்குவரத்து நிறுத்தப்படும் என்பதால் பொதுமக்கள் தங்களது பயணங்களை அதற்கேற்ப திட்டமிட்டு கொள்ள வேண்டும்.
காசி தமிழ் சங்கமம் நிறைவு விழாவில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளதாகவும், 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் துணை குடியரசு தலைவர் வருகையையொட்டி பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம், ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மற்றும் நாளை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி டிரோன்கள் பறக்க விடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து டிரோன்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.






