என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வெயில் அதிகரித்து வருவதால் வீராணம் ஏரியின் நீர் மட்டம் குறைகிறது
    X

    வெயில் அதிகரித்து வருவதால் வீராணம் ஏரியின் நீர் மட்டம் குறைகிறது

    • ஏரியில் இருந்து சென்னைக்கு தினமும் 74 கன அடி குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
    • வீராணம் ஏரியின் நீர் மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    காட்டுமன்னார் கோவில்:

    கடலூர் மாவட்டத்தில் அதிக நீர் பிடிப்பு கொண்ட ஏரி வீராணம் ஏரியாகும்.

    இந்த ஏரி சேத்தியாதோப்பு பூதங்குடியில் தொடங்கி லால்பேட்டை வரை 14 கி.மீ. நீளத்துடன், 5 கிலோ மீட்டர் அகல பரப்பளவு கொண்டது. ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். 1465 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைக்க முடியும்.

    ஏரியில் இருந்து சம்பா பருவத்தில் கீரப்பாளையம், காட்டுமன்னார் கோவில், குமராட்சி, புவனகிரி, சிதம்பரம், பரங்கிப்பேட்டை உள்ளிட்ட காவிரி கடைமடை டெல்டா பகுதிகள் பாசன வசதி பெறுகின்றன.

    தற்போது அறுவடை நடைபெற்று வருவதால் தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதனால் ஏரியின் அனைத்து மதகுகளும் அடைக்கப்பட்டு தண்ணீர் தேக்கி வைத்து பராமரிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஏரியில் இருந்து சென்னைக்கு தினமும் 74 கன அடி குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெயில் அதிகரித்துள்ளதால் ஏரியில் 1465 மில்லியன் கன அடியாக இருந்த தண்ணீர் தற்போது 1,011 மில்லியன் கன அடியாக குறைந்துள்ளது.

    ஏரியில் தண்ணீர் குறைந்து வருவதால் மார்ச் முதல் ஜூன் வரையிலான கோடையில் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்குமா என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    Next Story
    ×