என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
முழு கொள்ளளவை நெருங்கும் வைகை அணை நீர்மட்டம்- கடும் வெள்ளப்பெருக்கால் விவசாயிகள் அவதி
- மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்றும் விட்டு விட்டு மழைக்கொட்டி தீர்த்து வருகிறது.
- கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் குடிநீர் செல்லும் முக்கிய குழாய்கள் உடைந்து சேதம் அடைந்தன.
வருசநாடு, அக்.18-
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. தேனி, திண்டுக்கல் உள்பட 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.
வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான வெள்ளிமலை, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை தொடங்கி விடிய விடிய கன மழை பெய்தது. இதேபோல் போடியில் உள்ள முக்கிய நீர்பாசன குளங்களான பங்காறுசாமி குளம், செட்டிக்குளம், சங்கரப்பன்கண்மாய், மீனாட்சியம்மன் கண்மாய் ஆகியவற்றில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் அதிக அளவு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. போடி மெட்டு, குங்கரணி, பீச்சாங்கரை, ஊத்தாம்பாறை உள்ளிட்ட பகுதிகளிலும் விடிய விடிய கன மழை பெய்தது. இதனால் கொட்டக்குடி ஆறு, கொம்புதூக்கி ஆறு ஆகிய பகுதிகளிலும் வெள்ளம் கரைபுரண்டு செல்கிறது.
கடந்த சில மாதங்களாக போதிய மழையின்றி வறண்டு கிடந்த தடுப்பணை பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் சீறிப்பாய்ந்து செல்வதால் பொதுமக்கள் அங்கு செல்ல வேணடாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் விடுமுறை காரணமாக சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் தடுப்பணை பகுதிக்கு செல்லகூடும் என்பதால் அங்கு தடுப்புகள் வைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்றும் விட்டு விட்டு மழைக்கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று இரவு வைகை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளான வெள்ளிமலை, மேகமலை, அரசரடி, பொம்மராஜபுரம், வருஷநாடு உள்ளிட்ட சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. இதன் காரணமாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆற்றில் கரைபுரண்டு வந்த வெள்ள நீர் தேனி வருசநாடு சாலையில் பல்வேறு இடங்களில் புகுந்தது. இதனால் அந்தப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையில் தேங்கி இருந்த தண்ணீர் சிறிதளவு வடியத் தொடங்கியதும் வாகனங்கள் தண்ணீருக்குள் மெதுவாக சென்றது.
இது தவிர வருஷநாடு முதல் கண்டமனூர் வரையிலான வைகை ஆற்றங்கரையோரம் உள்ள பல்வேறு தோட்டங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் விளைநிலங்கள் அனைத்தும் தண்ணீரால் நிரம்பி காட்சியளித்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
மார்க்கையன்கோட்டை செல்லும் சாலையில் முல்லையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் டிரான்ஸ்பார்மர், குடிசை வீட்டை சூழ்ந்த வெள்ளம்.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய 2 நாட்களிலேயே வைகை ஆற்றில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இனி வரும் நாட்களில் மழை அதிகரித்து வைகை ஆற்றில் அதிக அளவு வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதால் வைகை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேகமலை அருவியில் இருந்து செல்லும் தண்ணீர் மேகமலை, சிங்கராஜபுரம், குமணன்தொழு ஆகிய 3 ஊராட்சிகளை சேர்ந்த 64 கிராமங்கள் பயன் அடைந்து வருகின்றனர்.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் குடிநீர் செல்லும் முக்கிய குழாய்கள் உடைந்து சேதம் அடைந்தன. இதனால் 64 கிராம மக்கள் குடிநீரின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மழை நின்றபிறகுதான் குழாய்கள் சீரமைக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது. எனவே அதுவரை குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
வைகை அணைக்கு நேற்று 1319 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் இன்று காலை 12589 கன அடி நீர் வருவதால் இருகரைகளையும் தொட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. ஒருசில இடங்களில் கரையோரம் உள்ள வயல்களுக்குள்ளும் தண்ணீர் சென்று விட்டது.
71 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 62.47 அடியாக உள்ளது. அணைக்கு 12 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வருவதால் விரைவில் முழு கொள்ளளவை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 68 அடியை எட்டியவுடன் முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும். இதனால் அணைக்கு வரும் நீர்வரத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.








