என் மலர்
தமிழ்நாடு
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை விழுப்புரம் பயணம்
- விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் புறவழிச் சாலையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
- தி.மு.க. இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைக்கின்றார்.
விழுப்புரம்:
தமிழக துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு மாவட்டங்களில் வளர்ச்சி பணிகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். கடந்த மாதம் இறுதியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு துறை சார்பில் ஆய்வு மேற்கொண்டு அந்தந்த மாவட்டங்களில் வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்துவதற்கு உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை (செவ்வாய்கிழமை) தமிழக துணை முதல்வராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக வருகை புரிய உள்ளார் . விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை சரியாக மதியம் 2 மணிக்கு வரும் தமிழக துணை உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க விழுப்புரம் வடக்கு மாவட்டம் மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் புறவழிச் சாலையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அமைச்சர் பொன்முடி தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார். அதனை தொடர்ந்து வடக்கு மாவட்ட தி.மு.க.சார்பில் முன்னாள் அமைச்சரும் செஞ்சி தொகுதி எம்.எல்.ஏ.வுமான செஞ்சி மஸ்தான், மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் சேகர், முன்னாள் எம்.எல்.ஏ., மாசிலாமணி உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் தொண்டர்கள் வரவேற்கின்றனர்.
அதனைத் தொடர்ந்து சரியாக 4 மணி அளவில் விழுப்புரம் தெற்கு மாவட்ட சார்பில் மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான டாக்டர் பொன். கவுதமசிகாமணி தலைமையில் விக்கிரவாண்டி டோல்கேட் அருகே சிறப்பான வரவேற்பளிக்கப்படுகிறது. இதில் அமைச்சர் பொன்முடி, எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் லட்சுமணன் அன்னியூர் சிவா, மாவட்ட சேர்மனும் அவை தலைவருமான ஜெயச்சந்திரன் மற்றும் மாவட்ட ஒன்றிய உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்கின்றனர் .
அதனைத்தொடர்ந்து சரியாக 5 மணி அளவில் திருவெண்ணெய்நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வெண்கல திருவுருவ சிலையை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இரவு விழுப்புரத்தில் தங்குகிறார். 6-ந் தேதி காலை 10 மணி அளவில் விழுப்புரம் புதுவை சாலையில் தி.மு.க. இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைக்கின்றார். காலை 11 மணியளவில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ள பல்வேறு துறைகளில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார். அப்போது தற்போது நடைபெறும் பணிகள், புதிய திட்ட பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில் கலெக்டர் பழனி மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.