என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விமான நிலையத்தில் மோதல் சம்பவம்: காங்கிரஸ் நிர்வாகி மயூரா ஜெயக்குமார் உள்பட 3 பேர் மீது வழக்கு
- காங்கிரஸ் நிர்வாகிகளும் விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.
- விசாரிக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பீளமேடு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
கோவை:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருப்பவர் கே.சி. வேணுகோபால்.
இவர் கடந்த 17-ந் தேதி கேரளாவில் நிகழ்ச்சியை முடித்து கொண்டு டெல்லி செல்ல கோவை விமான நிலையத்திற்கு வந்தார்.
அவரை வழியனுப்பி வைக்க கோவை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளும் திரண்டிருந்தனர். அந்த சமயம் காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், மயூரா ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்ததால் சலசலப்பு ஏற்பட்டது. பொதுச்செயலாளர் வேணுகோபால் அவர்களை சமாதானம் செய்து விட்டு, டெல்லி புறப்பட்டு சென்றார்.
காங்கிரஸ் நிர்வாகிகளும் விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார், அங்கு நின்றிருந்த காங்கிரஸ் ஐ.என்.டியூ.சி நிர்வாகி கோவை செல்வன் மீது மோதியதாக தெரிகிறது.
இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஆனது. அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே ஐ.என்.டி.யூ.சி நிர்வாகி கோவை செல்வன் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மயூரா ஜெயக்குமார் உள்பட 3 பேர் மீது புகார் அளித்தார். விமான நிலையத்தில் மயூரா ஜெயக்குமாரும், அவருடன் வந்தவர்களும் வேண்டும் என்றே என்னையும், என்னுடன் வந்தவர்களையும் தாக்க முயன்றனர். எனவே அவர்கள் மீது வழக்குபதிந்து நடவடிக்கை எடுத்து, எனக்கும், எனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
இதுதொடர்பாக விசாரிக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பீளமேடு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகி மயூரா ஜெயக்குமார் மற்றும் அவருடன் வந்த தமிழ்ச்செல்வன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 3 பேர் மீது அவதூறாக பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 2 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.






