என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஊட்டியில் 2-வது நாளாக மலர் கண்காட்சியை காண குவிந்த சுற்றுலா பயணிகள்
- மலர் கண்காட்சியை தொடங்கியதை அடுத்து ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குவிந்தது.
- சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுப்பதற்காகவே செல்பி பாயிண்டுகளும் அமைக்கப்பட்டிருந்தது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கோடைவிழா நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான கோடைவிழா கடந்த 3-ந் தேதி காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. கோடைவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சி நேற்று தொடங்கியது.
கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மலர் கண்காட்சியையொட்டி, தாவரவியல் பூங்காவில் 2 லட்சம் பல வண்ண கொய்மலர்களை கொண்டு பொன்னியின் செல்வன் அரண்மனை, அரண்மனை நுழைவு வாயில் மற்றும் பல வண்ண கார்னேசன், ரோஜா மலர்களை கொண்டு கரிகாலன் கல்லணை, யானை, ராஜ சிம்மாசனம், சிப்பாய் உள்ளிட்டவை அலங்காரம் செய்து வைக்கப்பட்டு இருந்தது.
மலர் கண்காட்சியை தொடங்கியதை அடுத்து ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குவிந்தது. இன்று 2-வது நாளாக ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு காலையிலேயே சுற்றுலா பயணிகள் வந்தனர்.
அவர் அங்கு மலர்களால் உருவாக்கப்பட்டு இருந்த பொன்னியின் செல்வன் அரண்மனை, கரிகாலன் கல்லணை, யானை உள்ளிட்டவற்றை பார்த்து ரசித்து, அதன்முன்பு நின்று புகைப்படமும் எடுத்தனர்.
அங்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த ராஜ சிம்மாசனத்திலும் அமர்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுப்பதற்காகவே செல்பி பாயிண்டுகளும் அமைக்கப்பட்டிருந்தது.
பூங்காவில் பல வண்ண மலர்கள் பூத்து குலுங்கின. இந்த மலர்களையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
மலர் அலங்காரங்கள் மற்றும் மலர்களை பார்த்து ரசித்த சுற்றுலா பயணிகள், அங்குள்ள புல்வெளி தரையில் அமர்ந்து தங்கள் குடும்பத்தினர், குழந்தைகளுடன் விளையாடியும் மகிழ்ந்தனர்.






