நெருங்கும் சட்டமன்ற தேர்தல்: நாளை கூடுகிறது தமிழக சட்டசபை

சட்டசபை கூட்டம் எத்தனை நாட்கள் நடக்கும் என்பதை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்ய உள்ளது.சட்டசபை கூட்டத்தொடரில் காசா போர் நிறுத்தம் தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.
நெருங்கும் சட்டமன்ற தேர்தல்:  நாளை கூடுகிறது தமிழக சட்டசபை
Published on

சென்னை:

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் ஜனவரி மாதம் 6-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டம் 4 நாட்கள் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து மார்ச் 14-ந் தேதி சட்டசபையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் ஆனது. அதைத்தொடர்ந்து, மார்ச் 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 2 பட்ஜெட்டுகள் மீதான பொது விவாதம் நடைபெற்றது.

மார்ச் 24-ந் தேதி முதல் ஏப்ரல் 29-ந் தேதிவரை துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடந்தன. பின்னர் தேதி குறிப்பிடாமல் சட்டசபை கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் 6 மாத கால இடைவெளியில் சட்டசபை மீண்டும் கூட்டப்பட வேண்டும் என்ற அவை விதியின் அடிப்படையில், தமிழக சட்டசபை மீண்டும் நாளை கூடுகிறது.

சட்டசபை கூடியதும், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கற்குறிப்பு வாசிக்கப்படுகிறது. கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து, வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த அமுல் கந்தசாமி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை அலுவல்கள் ஒத்திவைக்கப்படுகிறது.

சட்டசபை கூட்டம் எத்தனை நாட்கள் நடக்கும் என்பதை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்ய உள்ளது. இதற்கான கூட்டம், சபாநாயகர் அறையில் இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு நடக்க உள்ளது. சட்டசபை கட்சிகளின் தலைவர்கள், கொறடாக்கள் பங்கேற்கிறார்கள். 15, 16 மற்றும் 17 ஆகிய 3 நாட்கள் அவை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சட்டசபை கூட்டத்தொடரில் காசா போர் நிறுத்தம் தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்குவதால் இந்த கூட்டத்தில் காரசார விவாதத்திற்கு பஞ்சம் இருக்காது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com