என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எம்.எல்.ஏ.க்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி சட்டசபை ஒத்திவைப்பு
- சபாநாயகர் அப்பாவு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர் மறைவு குறித்து இரங்கல் குறிப்புகளை வாசித்தார்.
- காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் நலம்பெற வேண்டும் என்று இப்பேரவை தெரிவிக்கிறது.
சென்னை:
தமிழக சட்டசபைக் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் அப்பாவு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேர் மறைவு குறித்து இரங்கல் குறிப்புகளை வாசித்தார்.
மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களான புரட்சி மணி, குணசேகரன், கோவிந் தசாமி, அமர்நாத், அறிவழகன், துரைஅன்பரசன் என்கிற ராமலிங்கம், கவிஞர் ரகுமான், இரா. சின்னசாமி ஆகியோர் மறைவுக்கு சபை ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கும் வகையில் உறுப்பினர்கள் அனைவரும் 2 மணித்துளிகள் எழுந்து அமைதி காக்கும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி சட்டசபையில் இருந்த அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து கரூரில் கடந்த 27-ந்தேதி அன்று த.வெ.க. கட்சியின் பிரசாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேர்களின் மறைவுக்கு இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்ததாவது:-
27.9.2025 அன்று கரூரில் நடந்த அரசியல் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் அறிந்து இந்த பேரவை அதிர்ச்சியும் தாங்க முடியாத துயரமும் கொள்கிறது. இந்த துயர செய்தி அறிந்ததும் முதலமைச்சர் அன்று இரவே கரூருக்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களையும் சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு நிதி உதவியும் வழங்க உடனடியாக வழங்க உத்தரவிட்டார்.
மருத்துவ சிகிச்சையில் இருந்தவர்களுக்கு அனைத்து விதமான சிறப்பு ஏற்பாடுகளையும் துரிதப்படுத்த அமைச்சர்களை உடனே கரூருக்கு அனுப்பி வைத்தார். காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் நலம்பெற வேண்டும் என்று இப்பேரவை தெரிவிக்கிறது.
கரூர் துயர சம்பவத்தில் உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு பேரவை தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. இந்த இரங்கல் தீர்மானத்தை நிறைவேற்றவும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த 2 நிமிடம் மவுனம் காக்கவும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து எம்.எல்.ஏக்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
மேலும் கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி வி.எஸ்.அச்சுதானந்தன், ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்-மந்திரி சிபுசோரன், நாகலாந்து மாநில கவர்னராக இருந்த இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, தமிழக அரசின் முதன்மைச் செயலாளராக இருந்த டாக்டர் பீலா வெங்கடேசன், நடப்பு சட்டமன்ற உறுப்பினர் அமுல்கந்தசாமி ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இவர்களது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் 2 மணித்துளிகள் எழுந்து நின்று அமைதி காத்தனர். அத்துடன் சட்டப்பேரவை நிகழ்ச்சியில் ஒத்திவைக்கப் பட்டது. சட்டசபை மீண்டும் நாளை காலை கூடும் என்று அறிவிக்கப்பட்டது.
முன்னதாக எடப்பாடி பழனிசாமி சட்டசபை அறையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது சட்டசபை விவாதத்தில் எழுப்ப வேண்டிய விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
நாளை (15-ந்தேதி) காலை நடைபெறும் சட்டசபைக் கூட்டத்தில் கேள்வி நேரம் முதலில் எடுத்துக் கொள்ளப்படும். அதன் பிறகு 2025-2026-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் சட்டசபையில் தாக்கல் செய்யப்படும். இதன் மீதான விவாதம் 16-ந்தேதி அன்று நடைபெறும். 17-ந்தேதி அன்று நிதித்துறை அமைச்சர் பதில் அளிப்பார். அதன் பிறகு கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்க சட்ட மசோதா அறிமுகம் செய்யப்பட்டு விவாதம் இன்றி நிறைவேற்றப்படும்.
இந்த சட்டசபைக் கூட்டத்தொடரில் கரூர் துயர சம்பவம், கோல்ட்ரிப் இருமல் மருந்து விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.






