என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திருமழிசை புதிய பஸ் நிலையம் பணி முழுவதும் முடிந்தது- அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது
    X

    திருமழிசை புதிய பஸ் நிலையம் பணி முழுவதும் முடிந்தது- அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வருகிறது

    • ரூ.10 கோடியில் பணிமனை, காவல் நிலையம் ஆகியவை கட்டப்பட உள்ளன.
    • மல்டி லெவல் பார்க்கிங் வசதியும் அமைக்கப்பட்டு உள்ளன.

    சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னை நகருக்குள் வெளியூர் பஸ்கள் வருவதை தடுக்கும் வகையில் தற்போது அனைத்து பஸ்களும் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதேபோல் மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்தும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் தனியாக இயக்கப்பட்டு வருகிறது. தற்போது கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்தும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் சென்னையில் 4-வது பஸ்நிலையமாக திருமழிசை அடுத்த குத்தம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக வீட்டுவசதி வாரியத்திடம் இருந்து, 24.8 ஏக்கர் நிலம் பெறப்பட்டது. இதில் ரூ. 336 கோடி செலவில் புதிய பஸ்நிலையம் அமைக்கும் பணிகள் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுமார் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் இந்த புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே கூடுதல் தளத்துடன் ரூ.2 கோடியில் சாலை மேம்பாட்டு பணிகள், ரூ.10 கோடியில் பணிமனை, காவல் நிலையம் ஆகியவை கட்டப்பட உள்ளன. இதையடுத்து பஸ்நிலைய திட்ட மதிப்பு ரூ.427 கோடியாக உயர்ந்தது. தற்போது பஸ்நிலையத்தில் பெரும்பாலும் பணிகள் முடிந்து விட்டன. வர்ணம் பூசும் இறுதி கட்ட பணிகள் மட்டும் நடந்து வருகிறது.



    எனவே திருமழிசை புதிய பஸ்நிலையம் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய பஸ் நிலையத்தில் இருந்து பெங்களூரு, கிருஷ்ணகிரி போன்ற மேற்கு பகுதிகளுக்கு செல்லும் 70 பஸ்கள், தனியார் சேவைகளுக்காக 30 பஸ்கள், மாநகர போக்குவரத்து கழகத்தின் 30 பஸ்கள் இயக்க திட்டமிட்டு உள்ளனர். மேலும் இங்கு டிரைவர், கண்டக்டர்கள் தங்க இடவசதி, கடைகள் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், 200 நான்கு சக்கர வாகனங்கள், நகரும் படிக்கட்டு வசதி, குடிநீர் வசதி, சிசிடிவி கேமரா மற்றும் கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட வசதிகளும் மல்டி லெவல் பார்க்கிங் வசதியும் அமைக்கப்பட்டு உள்ளன.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, திருமழிசை, குத்தம்பாக்கம் பஸ்நிலையம் பயன்பாட்டிற்கு வந்தவுடன் மெட்ரோ ரெயில் சேவையை நீட்டிப்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையத்தில் போக்குவரத்து நெரிசலோ, தண்ணீர் தேக்கமோ இருக்கக்கூடாது என்று திட்டமிடப்பட்டு உள்ளது. அடுத்த மாத இறுதியில் புதிய பஸ்நிலையம் திறப்பு இருக்கும் என்றார்.

    Next Story
    ×