search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆட்சியில் பங்கு என்பது மக்கள் அங்கீகாரத்துடன் நிறைவேறும்- திருமாவளவன்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஆட்சியில் பங்கு என்பது மக்கள் அங்கீகாரத்துடன் நிறைவேறும்- திருமாவளவன்

    • ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல் வெட்டப்பட்டது, தஞ்சை பள்ளியில் ஆசிரியை கொலை செய்யப்பட்டது உள்ளிட்டவை வருத்தமளிக்கிறது.
    • பழனி அடிவாரம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் ஏழை சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பழனி:

    பழனியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பழனிக்கு வருகை தந்தார். பழனி தேவஸ்தான தங்கும் விடுதியில் இரவு தங்கிய திருமாவளவன் இன்று அதிகாலையிலேயே பழனி மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து மலை அடிவாரத்தில் உள்ள புலிப்பாணி சித்தர் ஆசிரமத்திற்கு சென்ற திருமாவளவன் தொட்டிச்சி அம்மனை வழிபாடு செய்தார். அதன்பின் போகர், பழனி ஆதினம், சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் மடத்திற்கு சென்றார். அவருக்கு அங்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது திருமாவளவன் புலிப்பாணி சுவாமிகளிடம் ஆசிபெற்றார்.

    அதனை தொடர்ந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது,

    ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில் வக்கீல் வெட்டப்பட்டது, தஞ்சை பள்ளியில் ஆசிரியை கொலை செய்யப்பட்டது உள்ளிட்டவை வருத்தமளிக்கிறது. இந்த சம்பவங்கள் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்பாடுகளால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலைக்குச் செல்வதை தடுக்க தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டு ரேஷன் அரிசி கடத்தலால் ரூ.1900 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக பா.ம.க. தலைவர் அன்புமணி தெரிவித்தது எந்த ஆதாரத்தின் அடிப்படையில் என தெரியவில்லை. அவ்வாறு அவர் தெரிவித்தது உண்மையாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக தடுத்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பழனி அடிவாரம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் ஏழை சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களுக்கு மட்டுமாவது அனுமதி அளித்து அவர்களது வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழனி பகுதியில் உள்ள அருந்ததியர் சமுதாயத்திற்கு சொந்தமான நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அதையும் மீட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிற்கு கோரிக்கை விடுத்துள்ளேன்.

    ஆட்சி அதிகாரத்தில் வி.சி.க. விற்கு பங்கு என்று துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளது அவரது சொந்த விருப்பமாகும். ஆட்சி அதிகாரம் என்பது மக்கள் அளிக்கும் தீர்ப்பு. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மீது தமிழக மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு, எங்களின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு அவர்கள் ஒத்துழைப்போடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்று தமிழக மக்கள் அங்கீகாரம் கொடுக்கும்போது அது நிறைவேறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வருகிற தேர்தலில் விஜயுடன் கூட்டணி அமையுமா என்ற கேள்விக்கு பதில் எதுவும் சொல்லாமல் வணக்கம் தெரிவித்து சென்றார்.

    இதனை தொடர்ந்து பழனி அருகே நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வி.சி.க. சார்பில் கட்சி கொடி ஏற்றிவைத்து மூத்த நிர்வாகிகளின் படங்களை திறந்துவைத்தார். அவரிடம் வியாபாரிகள், பொதுமக்கள் பலர் மனுக்களை அளித்தனர்.

    Next Story
    ×