என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகள் கொடுத்தாலும் தி.மு.க. கூட்டணியில் இருப்போம் -  திருமாவளவன்
    X

    குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகள் கொடுத்தாலும் தி.மு.க. கூட்டணியில் இருப்போம் - திருமாவளவன்

    • அ.தி.மு.க. தலைமையிலான அணி என்பது பா.ஜ.க. தலைமையிலான அணி என்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது.
    • பா.ஜ.க., பா.ம.க. இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம்.

    திருச்சி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தலைமையிலான 2 அணிகளுக்கான மோதலாக தான் அமையும். அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. இருப்பதால் அதனை வீழ்த்த வேண்டிய அவசியம் உள்ளது.

    அ.தி.மு.க. தலைமையிலான அணி என்பது பா.ஜ.க. தலைமையிலான அணி என்ற தோற்றத்தை உருவாக்கியுள்ளது. அ.தி.மு.க.வை விழுங்குவதுதான் பா.ஜ.க.வின் செயல் திட்டம். இதை அ.தி.மு.க.வினர் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள்.

    எங்களுக்கு சீட்டு குறைவது பிரச்சனை இல்லை. நாங்கள் ஆண்ட கட்சியும் கிடையாது. ஆனால் ஆண்ட கட்சி 75 எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் கட்சி. தேய்மானம் அடைவதற்கு அ.தி.மு.க. உடன்படுகிறதா?

    முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார் அண்ணாவை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்டுள்ளனர். அண்ணா, பெரியாரைக் கொச்சைப்படுத்தும் அவர்களுடன் பயணிப்பது தற்கொலைக்கு சமம்.

    பெரியாரை வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட நடிகர் விஜய் பெரியார் குறித்து சர்ச்சை வீடியோவுக்கு தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். அவருக்கு ஆலோசனை வழங்குபவர்கள் இது பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும். பெரியாரை விமர்சித்த பின்னர் விஜய் அமைதியாக இருப்பது ஏன்?

    திரை உலகில் போதை கலாச்சாரத்தால் நடிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அதர்ச்சியான ஒன்று. தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். போதைப் பொருட்களை தடுக்க தனி உளவு பிரிவு இருந்தாலும் அதனை தனிப்படை அமைத்து கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.

    தமிழக இளைஞர்களை காப்பாற்ற வேண்டும். அ.தி.மு.க. கூட்டணியில் தற்போது வரை பா.ஜ.க. மட்டுமே இருக்கிறது. அந்த கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. இல்லை. தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணையும் என்ற ஒரு நிலை வந்தால் அப்போது அது குறித்து கருத்து தெரிவிக்கிறேன்.

    பா.ஜ.க., பா.ம.க. இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம். எங்களுக்கு குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகள் கொடுத்தாலும் தி.மு.க. கூட்டணியில் இருப்போம். இதை கூறுவதால் எங்கள் தொண்டர்கள் சோர்வடைய மாட்டார்கள். காரணம் எங்கள் தொண்டர் களை கொள்கை அடிப்படையில் செழுமைப்படுத்தி உள்ளோம். தி.மு.க. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே சிலர் தொடர்ந்து இதைக் கேட்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×