என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பாறைக்குழியில் குப்பைகள் கொட்டுவதை கண்டித்து திருப்பூர் நெருப்பெரிச்சலில் பொதுமக்கள் விடிய, விடிய போராட்டம்
    X

    பாறைக்குழியில் குப்பைகள் கொட்டுவதை கண்டித்து திருப்பூர் நெருப்பெரிச்சலில் பொதுமக்கள் விடிய, விடிய போராட்டம்

    • பெண்கள், குழந்தைகள் உள்பட பொது மக்கள் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய, விடிய தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பொதுமக்கள் போராட்டத்தையொட்டி அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அனுப்பர்பாளையம்:

    திருப்பூர் நெருப்பெரிச்சல் ஜி.என். கார்டன் பகுதியில் உள்ள பாறைக்குழியில் மாநகராட்சி சார்பில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்களுக்கு நோய் தொற்று மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அங்கு குப்பை கொட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக ஜி.என்.கார்டன் நுழைவு வாயில் முன்பு நேற்று காலை 9 மணி முதல் பொதுமக்கள், குடியிருப்போர் சங்க நிர்வாகிகள், அனைத்து கட்சி நிர்வாகிகள், பத்திர எழுத்தர்கள் என 400-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே குப்பை கொட்டுவதை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி போராட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் சிகாமணி தலைமையில் பொதுமக்கள், மாவட்ட கலெக்டர், மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தனர்.

    அதன்பேரில் மாநகர நல அலுவலர் நேரில் சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குப்பை கொட்டுவதை நிறுத்த வேண்டும் என்றும், ஏற்கனவே கொட்டப்பட்ட குப்பை மீது மண்ணை கொட்டி மூட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். இதற்கு அவர் பரிசீலனை செய்வதாக கூறி அங்கிருந்து சென்றார்.

    இந்தநிலையில் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று கூறி பெண்கள், குழந்தைகள் உள்பட பொது மக்கள் நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய, விடிய தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பொதுமக்கள் அனைவருக்கும் அங்கேயே இரவு உணவு மற்றும் காலை உணவு, குடிநீர், தேனீர் ஆகியவை வழங்கப்பட்டது. நேற்று காலை தொடங்கிய இந்த போராட்டம் தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    பொதுமக்கள் போராட்டத்தையொட்டி அப்பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×