என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கோமியத்தின் சக்தி அறிவியல் பூர்வமானது.. என்னிடம் ஆதாரம் உள்ளது - ஐஐடி இயக்குநர் காமகோடி
    X

    கோமியத்தின் சக்தி அறிவியல் பூர்வமானது.. என்னிடம் ஆதாரம் உள்ளது - ஐஐடி இயக்குநர் காமகோடி

    • அவ்வப்போது கோமியத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
    • கோமியத்தின் மருத்துவ குணங்கள் குறித்த ஆர்வத்தைத் தூண்டுவதற்கான ஒரு நேர்மறையான விளைவாக இந்த விவாதத்தை பார்க்கிறேன்

    கோமியம் சர்ச்சை:

    மாட்டுப் பொங்கலையொட்டி, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள கோசாலையில் நடைபெற்ற கோ பூஜையில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கலந்துகொண்டார்.

    அந்நிகழ்ச்சியில் பேசிய அவர், "எனது தந்தை ஒரு சந்நியாசியிடம் சென்று எனக்கு ஜுரம் அடிக்கிறது. நான் மருத்துவரை சென்று பார்க்கவா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த சந்நியாசி அதெல்லாம் வேண்டாம், பசுமாட்டு கோமியம் குடித்தால் ஜுரம் சரியாகி விடும் என்று கூறியுள்ளார். உடனடியாக அவர் கோமியத்தை பருகியுள்ளார். அடுத்த 15 நிமிடத்தில் அவருக்கு ஜுரம் சரியாகி விட்டது.

    கோமியம் மிகப்பெரிய மருந்து, பிணிகளை நீக்கும். உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தி கோமியத்தில் இருப்பதால், அவ்வப்போது கோமியத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

    மாணவர்களுக்கு அறிவியலை போதிக்கும் இந்தியாவின் உச்சபட்ச கல்வி நிறுவனத்தின் இயக்குநரே அறிவியலுக்கு புறம்பாக பேசியுள்ளது அரசியல் ரீதியாகவும், அறிவியல் வல்லுனர்களிடையேயும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

    காமகோடி விளக்கம்:

    இந்நிலையில் தனது கருத்து அறிவியல் ரீதியானதுதான் என்றும் அதற்கு தன்னிடம் ஆதாரம் உள்ளது என்றும் காமகோடி தெரிவித்துள்ளார்.

    கோமியம் விவகாரம் தொடர்பாக சென்னை ஐஐடி வளாகத்தில், ஐஐடி இயக்குனர் காமகோடி செய்தியாளர்களை சந்தித்தார்.

    அரசியல் சர்ச்சை குறித்த நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த காமகோடி சிரித்துக் கொண்டே கையை அசைத்து, "நான் அரசியலுக்கு வரப்போவதில்லை. இது முற்றிலும் அறிவியல் பூர்வமானது. சில பண்டிகைகளின் போது நானும் பஞ்சகவ்யத்தை சாப்பிட்டுள்ளேன்.

    பசுவின் சிறுநீரில் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. நான் கூறியதை அமெரிக்காவில் நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஐந்து ஆய்வுக் கட்டுரைகள் அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளன. அந்த ஆவணத்தை உங்கள் அனைவருக்கும் அனுப்புவேன்"

    கோமியத்தின் மருத்துவ குணங்கள் குறித்த ஆர்வத்தைத் தூண்டுவதற்கான ஒரு நேர்மறையான விளைவாக இந்த விவாதத்தை பார்க்கிறேன் என்று கூறினார்.

    மேலும் ஐஐடி மெட்ராஸ் இதைப் பற்றி ஆராய்ச்சி செய்யுமா என்ற கேள்விக்கு பதிலளித்த காமகோடி, "ஆசிரியர்கள் ஆர்வமாக இருந்தால், இதை ஐஐடியில் ஆய்வு செய்யலாம். எங்களிடம் மருத்துவ அறிவியல் தொழில்நுட்பத் துறை உள்ளது. ஆனால், ஆனால் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.

    இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் சொல்வது என்ன?

    இதற்கிடையே காமகோடி கருத்துக்கு இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    பசுக்கள், எருமைகளின் சிறுநீர் மாதிரிகளை இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வுக்கு உட்படுத்தியது. இந்த ஆய்வில் தீங்கு விளைவிக்கக் கூடிய 14 வகையான பாக்டீரியாக்கள் அதில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மனிதர்கள் கோமியத்தை குடித்தால் அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

    மேலும் இந்த ஆய்வு முடிவுகள் காமகோடிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் கோமியம் ஆபத்தானது என்ற ஆராய்ச்சி குறித்து தெரியாது என காமகோடி கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×