என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தடைகாலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது..! கடலுக்கு செல்ல தயாராகும் விசைப்படகுகள்
- விசைப்படகுகளை மீனவர்கள் கடலில் இறக்கி தயார் நிலையில் வைத்து உள்ளனர்.
- சின்ன முட்டம் மீன்பிடி துறை முகத்திலிருந்து விசைப்படகு கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றன.
மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் கன்னியாகுமரி முதல் சென்னை திருவள்ளூர் வரையிலான தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதி யில் விசைப்படகுகள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் அமலுக்கு வந்த மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) விசைப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டும். ஆனால் இன்று மீனவர்களுக்கு ஓய்வு நாள் என்பதால் நாளை (திங்கட் கிழமை) அவர்கள் மீன் பிடிக்கச் செல்ல உள்ளனர்.
இதைதொடர்ந்து கரையேற்றி பழுது பார்த்த விசைப்படகுகளை மீனவர்கள் கடலில் இறக்கி தயார் நிலையில் வைத்து உள்ளனர்.
மேலும் தங்களது மீன்பிடி வலைகளையும் சரி செய்து தயார்படுத்தி உள்ளனர். விசைப்படகு களில் உள்ள கிடங்குகளில் ஐஸ் கட்டி நிரப்பும் பணி, டீசல் நிரப்பும் பணி, மீன்பிடி உபகரணங்கள் மற்றும் மீன்பிடி வலைகளை தயார்படுத்தி வைக்கும் பணிகளில் மீனவர்கள் இன்று தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்று மாலை சின்னமுட்டம் துறைமுகத்தில் விசேஷ ஜெபம் மற்றும் திருப்பலி நடக்கிறது. நாளை அதிகாலை 5 மணிக்கு சின்ன முட்டம் மீன்பிடி துறை முகத்திலிருந்து விசைப்படகு கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றன.
இந்த விசைப்படகுகள் நாளை இரவு 9 மணிமுதல் கடலில் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்புவார்கள். தடை காலம் முடிந்து மீன்பிடித்து விட்டு கரை திரும்பும் விசை படகுகளில் சீலா, வஞ்சிரம் நெய்மீன், பாறை, விளமீன், கைக்கழுவை, நெடுவா போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
2 மாதங்களுக்கு பிறகு நாளை முதல் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதால் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் இன்றே களைகட்ட தொடங்கி விட்டது. மீன் ஏலம் எடுப்பதற்காக வெளியூர் மீன் வியாபாரிகளும் வந்து குவிந்த வண்ணமாக உள்ளனர்.