என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தேக்கடி படகு துறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தமிழன்னை படகு
12 ஆண்டுகளுக்கு பிறகு முல்லைப்பெரியாறு அணையில் தமிழன்னை படகுக்கு அனுமதி
- பல்வேறு தொழில்நுட்ப காரணங்களை கூறி அதனை இயக்க விடாமல் கேரளா அரசு தடுத்து வந்தது.
- கேரளா அரசு தடுத்து வந்ததை கண்டித்து தமிழகத்தில் உள்ள பல்வேறு விவசாய சங்கங்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தன.
கூடலூர்:
கேரளா அரசால் 12 ஆண்டுகளாக தடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட தமிழன்னை படகு பயன்பாட்டிற்கு வந்தது.
பெரியாறு அணையில் தமிழக பொதுப்பணித்துறை சார்பில் இயக்கப்பட்ட நான்கு படகுகளில் ப்ளூ பெல், மங்கையர்க்கரசி ஆகிய 2 படகுகளும் செயல் இழந்துவிட்ட நிலையில், தற்போது 27 குதிரை திறன் கொண்ட ஜலரத்னா, கண்ணகி ஆகிய இரண்டு படகுகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2014ம் ஆண்டு தமிழக பொதுப்பணித்துறையினர் பராமரிப்பு கண்காணிப்பு பணிக்காக பயன்பாட்டுக்காக கொண்டுவரப்பட்ட 130 எச்.பி.திறன், இரண்டு டன் எடை வரை பொருட்களை எடுத்துச் செல்லும் வகையில் அமைக்கப்பட்ட ஸ்டீல் போட்டான தமிழன்னை படகை பல்வேறு தொழில்நுட்ப காரணங்களை கூறி அதனை இயக்க விடாமல் கேரளா அரசு தடுத்து வந்தது.
இதனையடுத்து, கடந்த 12 ஆண்டுகளாக தமிழன்னை படகு இயக்கப்படாமல் தேக்கடி படகுத்துறையில் நிறுத்தப்பட்டது. ஆனால் கேரள அரசின் சுற்றுலாத்துறை, நீர் வளத்துறை மற்றும் காவல் துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் பெரியாறு அணையில் 19 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழன்னை படகை இயக்க விடாமல் கேரளா அரசு தடுத்து வந்ததை கண்டித்து தமிழகத்தில் உள்ள பல்வேறு விவசாய சங்கங்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தன.
தமிழ்நாடு அரசின் பல்வேறு முனைகளில் நடைபெற்ற முன்னெடுப்புகள் காரணமாக, கேரளா அரசின் ஒப்புதலோடு நேற்றுமுன்தினம் படகை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதில், தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தமிழன்னை படகை பெரியாறு அணையில் இயக்கி ஆய்வு செய்தனர். இதில், அணை நீர் மட்டம், நில அதிர்வை கண்டறியும் சீஸ்மோகிராப், மழைமானி, காற்றின் வேகம் கண்டறியும் கருவி ஆகியவற்றின் இயக்கங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மெயின் அணை, பேபி அணை, கேலரி பகுதி, ஷட்டர், மண் அணை ஆகியவற்றையும் பார்வையிட்டனர். தலைமைப் பொறியாளர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில் பெரியாறு அணை சிறப்பு கோட்ட (கம்பம்) செயற்பொறியாளர் செல்வம், எஸ்.டி.ஓ. ராஜகோபால் உள்ளிட்ட பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசு பல்வேறு முனைகளில் எடுத்துள்ள முன்னெடுப்பு காரணமாக கடந்த 2025 ஆகஸ்ட் மாதம் மேலும் ஒரு புதிய படகை அணையில் இயக்குவதற்கு கேரளா அரசு ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில், புதிய படகிற்கும் தமிழக அரசு விரைவில் நிதி ஒதுக்கி அந்தப்படகும் அணையில் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.






