என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு- சென்னையில் 39.52 லட்சம் வாக்காளர்கள்
- வாக்காளர்கள் பட்டியலில் திருத்தம் செய்ய அவகாசம் வழங்கப்படுகிறது.
- 25 வயதுக்கு கீழ் உள்ள மனுதாரர்கள் வயது சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயமாகும்.
சென்னை:
புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை இன்று (செவ்வாய்க்கிழமை) இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த வாக்காளர் பட்டியல்கள் அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சிகளுக்கு தலா 2 நகல்கள் வழங்கப்படும்.
இன்று வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் தற்போது 6 கோடியே 27 லட்சத்து 30 ஆயிரத்து 588 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 7 லட்சத்து 90 ஆயிரத்து 791 பேர் ஆவார்கள்.
பெண் வாக்காளர்கள் 3 கோடியே 19 லட்சத்து 30 ஆயிரத்து 833 பேர் உள்ளனர். 3-ம் பாலினத்தவர் 8 ஆயிரத்து 964 பேர் உள்ளனர். தமிழகத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
தமிழகத்தில் பெரிய சட்டசபை தொகுதியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் தொகுதி உள்ளது. இங்கு 6 லட்சத்து 76 ஆயிரத்து 133 வாக்காளர்கள் உள்ளனர். மாநிலத்தில் மிகக்குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதியாக நாகை மாவட்டத்தில் உள்ள கீழ் வேளுர் தொகுதி உள்ளது. இந்த தொகுதியில் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 230 வாக்காளர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.
வாக்காளர்கள் பட்டியலில் திருத்தம் செய்ய அவகாசம் வழங்கப்படுகிறது. மேலும் வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்ய சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
நவம்பர் மாதம் 16, 17, 23, 24 ஆகிய 4 நாட்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடக்கும் இந்த சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்த்தல், நீக்கல், திருத்தல், இடமாற்றம், ஆதார் எண்ணை இணைத்தல் ஆகியவற்றை செய்யலாம்.
இந்த திருத்தங்களை செய்ய உரிய படிவங்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். மேலும் அலுவலக வேலை நாட்களில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலை திருத்துவதற்கான விண்ணப்ப படிவங்களை கொடுக்கலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு ஆதார், வங்கி அல்லது தபால் அலுவலக கணக்கு புத்தகம், பாஸ்போர்ட், விவசாயி புத்தகம், பதிவு செய்யப்பட்ட வாடகை குத்தகை பத்திரம், பதிவு செய்யப்பட்ட விற்பனை பத்திரம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு ஆவணத்தை பயன்படுத்தலாம்.
வயதுக்கு சான்றளிப்பதற்கு ஆதார் அட்டை, பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், 10-ம் வகுப்பு கல்வி சான்றிதழ், பாஸ்போர்ட் ஆகியவற்றை பயன்படுத்தலாம். 25 வயதுக்கு கீழ் உள்ள மனுதாரர்கள் வயது சான்றிதழை அளிக்க வேண்டியது கட்டாயமாகும்.
வாக்காளர்கள் பட்டியலில் திருத்தம் செய்ய ஆன்லைன் முறையிலும் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் இடம் பெறும் புகைப்படங்களின் தரத்தை மேம்படுத்தும் வகையில் படங்களை வாக்காளர்கள் அளிக்க வேண்டும்.
வெளிநாட்டில் இந்திய குடிமக்களின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரிகளிடம் படிவம் 6 ஏ நேரில் அளிக்கப்பட வேண்டும். தபாலில் அனுப்பும் பட்சத்தில் பாஸ்போர்ட்டின் நகலை கையெழுத்திட்டு அனுப்ப வேண்டும்.
ஒருவர் ஒரு தொகுதியில் இருந்து மற்றொரு தொகுதிக்கு மாறினால் படிவம் 8ஐ பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். படிவம் 6 புதிய வாக்காளர்களுக்கான விண்ணப்ப படிவம் ஆகும்.
படிவம் 6 பி என்பது வாக்காளர் பட்டியல் அங்கீகாரத்துக்காக ஆதார் எண் உண்மை என சான்றளிக்கும் படிவமாகும். படிவம் 7ஐ பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே உள்ள பெயரை நீக்குவதற்கு விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு இன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்கள் சிறப்பு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






