என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மாநாட்டில் அண்ணா, பெரியாரை சிறுமைப்படுத்தும் வீடியோ வெளியிட்டது மிகவும் தவறு - ராஜேந்திர பாலாஜி
    X

    மாநாட்டில் அண்ணா, பெரியாரை சிறுமைப்படுத்தும் வீடியோ வெளியிட்டது மிகவும் தவறு - ராஜேந்திர பாலாஜி

    • தமிழக அரசியலை பொறுத்தவரை சாமானியர்கள் இன்று உயர்ந்த பதவியில் இருக்கிறார்கள் என்றால் அதற்கு முழு முதற்காரணம் அண்ணா, பெரியார்தான்.
    • அ.தி.மு.க. தலைமை தான் தி.மு.க.விற்கு வலுவான எதிர்ப்பை கொடுக்கும்.

    சிவகாசி:

    மதுரையில் நேற்று இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில், வீடியோ படம் ஒன்று திரையிடப்பட்டது. அதில் பிள்ளையார் சிலை உடைப்பு போராட்டம் மற்றும் அண்ணா, பெரியார் போன்றோரை விமர்சிப்பது போன்ற காட்சிகளும், நாத்திக நரி, அதர்மம், போலி திராவிடம், வழிபாடு இல்லாத ஆலயமா, கட வுளை காணக்கூட நாணயமா? போன்ற வசனங்களுடன் இடம் பெற்றிருந்தன.

    அதே வேளையில் இந்த மாநாட்டில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கே.டி.ராஜேந்திரபாலாஜி, கடம்பூர் ராஜூ ஆகியோர் பங்கேற்று இருந்தனர். இந்த வீடியோ திரையில் ஒளிப ரப்பானபோது, அவர்கள் எந்தவொரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மாநாடு நிறைவு பெற்ற நிலையில் அண்ணா, பெரியார் குறித்து முருகன் மாநாட்டில் எழுந்த விமர்சனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதுதொடர்பாக சிவகாசியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. கூட்டணிக்கு ஒரு பயத்தை, ஒரு பீதியை முருக பக்தர்கள் மாநாடு உருவாக்கியிருக்கிறது. இதனால் அவர்கள் மாநாடு குறித்து மாற்று கருத்து தான் கூறுவார்கள். முருக பக்தர்கள் மாநாடு ஆன்மீகத்தின் அடையாளமாக ஒரு எழுச்சி மாநாடாக தான் அமைந்திருந்தது. முருக பக்தர்கள் மாநாட்டில் மக்கள் குவிந்ததன் காரணமாக மக்கள் மத்தியில் ஒரு மாற்றம் வந்திருக்கிறது. ஆளுகின்ற தி.மு.க. அரசிற்கு ஏமாற்றம் கிடைத்துள்ளது.

    அ.தி.மு.க.வில் பா.ஜ.க. இருப்பதால்தான் தங்களால் அ.தி.மு.க. கூட்டணிக்கு செல்ல முடியாது என திருமாவளவன் கூறியுள்ளார். அவரது கருத்துக்கள் அவர் உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து வரக்கூடிய கருத்துக்கள். தி.மு.க. கட்சியோடு மனதளவில் உறவை முடித்துக் கொண்டார். பெயரளவில் மட்டுமே உறவு வைத்துள்ளார். திருமாவளவன் அ.தி.மு.க. கூட்டணி வருவது குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவு எடுப்பார்.

    அ.தி.மு.க. ஏற்படுத்தியுள்ள கூட்டணி வலுவான கூட்டணி. இதில் மாற்றம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் சிறிதளவும் கிடையாது. தி.மு.க. கூட்டணியில் உள்ள வி.சி.க., ம.தி.மு.க., த.வா.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் உட்பட தி.மு.க. தலைமை மீது அதிருப்தியில் உள்ளனர்.

    தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிக சீட்டுகள் வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றார்கள் என்று சொன்னால் அங்கே பூகம்பம் வெடித்துள்ளது என்று தான் அர்த்தம். தி.மு.க. கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணி முறியக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணாவை விமர்சனம் செய்யும் வகையில் வீடியோவை ஒளிபரப்பியது வருத்தமளிக்கிறது.

    மறைந்த முன்னாள் தலைவர்களை விமர்சிக்கும் வகையில், அதிலும் அண்ணா, பெரியாரை சிறுமைப்படுத்தும் வீடியோவை இந்த முருக பக்தர்கள் ஆன்மீக மாநாட்டில் இந்து முன்னணியினர் வெளியிட்டது தவறு, அதனை தவிர்த்திருக்கலாம். அறிஞர் அண்ணாவின் பேச்சு, செயல், எழுத்துக்கள் சிலரின் மனதை புண்படுத்தி இருக்கலாம். அதனுடைய வெளிப்பாடாக வீடியோ வெளியிட்டு இருக்கலாம்.

    தமிழக அரசியலை பொறுத்தவரை சாமானியர்கள் இன்று உயர்ந்த பதவியில் இருக்கிறார்கள் என்றால் அதற்கு முழு முதற்காரணம் அண்ணா, பெரியார்தான். அவர்கள் இல்லையென்றால் என்னை போன்றவர்கள் கூட அரசியலுக்கு வந்திருக்க முடியாது. அப்பேற்பட்ட தலைவர்கள் பற்றி முருகன் மாநாட்டில் திரையிடப்பட்ட வீடியோ, விமர்சனம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

    தமிழர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினராலும் போற்றும் கடவுள் முருகன். அதேபோல் அனைத்து மதங்களையும் மதித்து போற்றும் கட்சி அ.தி.மு.க. என்பதில் மாற்றுக்கருத்தில்லை. எந்த மதம் சார்ந்த விழாக்கள், நிகழ்ச்சிகளில் அ.தி.மு.க. தலைவர்கள் கலந்துகொள்வது பழக்கமாகவும், வழக்கமாகவும் இருக்கிறது. மாற்றுக்கருத்தையும், மாற்று மதத்தினரையும் மதிக்கக்கூடியவர்கள் அ.தி.மு.க.வினர்.

    நேற்று நடைபெற்ற முருகன் மாநாட்டில் அண்ணா குறித்த விமர்சனங்களை தவிர்த்து இருக்கலாம். அப்போது நாகரீகம் கருதி நாங்கள் எதையும் கூறவில்லை. அடித்தட்டு, உழைக்கும் மக்களுக்காகவும், அவர்கள் ஆட்சி, அதிகாரத்திற்கு வருவதற்கும் காரணமாக இருந்தவர்களை விமர்சிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. அ.தி.மு.க. எப்போதும் மக்களுக்காக உழைக்கும் கட்சி.

    ஆன்மீக திருவிழாக்கள் எதுவாக இருந்தாலும், எந்த மதத்தை சார்ந்திருந்தாலும் நாங்கள் கலந்துகொள்வோம். அதில் மிகுந்த பக்குவம் கொண்டவர் எடப்பாடி பழனிசாமி. ஒரு நிகழ்ச்சியில் நடக்கின்ற நல்ல நிகழ்வுகளைப் பற்றி பேசுவோம். அதில் நடந்த ஒரு நிகழ்வைப் பற்றி பேசி அதனுடைய ஒட்டுமொத்த மாநாட்டின் நல்ல கருத்துக்களை புறக்கணிக்க, இன்றைய அரசியல் சூழலில் மறைந்த தலைவர்களின் நல்ல நிகழ்வுகளை பற்றி பேசுவதுதான் சாலச் சிறந்தது. முன்னாள் தலைவர்களின் ஒரு போக்கு சிந்தனைகளையும் அந்த நேரத்தில் எடுத்த முடிவுகளைப் பற்றி தற்போது விமர்சனம் செய்வது தேவை யற்ற விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தி.மு.க. ஆட்சியை எதிர்க்கும் கட்சிகள், அ.தி.மு.க. தலைமையில் இணையும் காலம் விரைவில் வரும். எடப்பாடி பழனிசாமியை தொட்டுப் பார்க்கவோ, அவரது வாழ்வியல் முறையிலோ, கருத்தியல் முறையிலோ தாக்குதல் நடத்தினால் அ.தி.மு.க.வின் எதிர்தாக்குதல் கடுமையாக இருக்கும். எங்கள் வாயில் இருந்து வரக்கூடிய வார்த்தைகள் வெடிகுண்டாக வரும். தி.மு.க. ஐ.டி. பிரிவு தனது மூர்க்கத்தனமான செயல்பாடுகளை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    எடப்பாடி பழனிசாமியை அசிங்கப்படுத்த நினைத்தவர்கள் இன்று ஓரமாக ஒதுங்கி இருக்கிறார்கள். தி.மு.க. அப்படி நினைத்தால் அவர்களும் ஓரமாக ஒதுங்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்படும். தி.மு.க.வின் ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற எண்ணுகின்ற தலைவர்களில் ஒருவராக தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் இருக்கிறார். விஜய் அ.தி.மு.க. கூட்டணிக்கு வர வேண்டும்.

    அ.தி.மு.க. தலைமை தான் தி.மு.க.விற்கு வலுவான எதிர்ப்பை கொடுக்கும். தி.மு.க.வை வெல்ல வேண்டும் என்றால், அ.தி.மு.க.வால் மட்டுமே முடியும் என்பதால் விஜய் பக்க பலமாக, உரமாக அ.தி.மு.க.வோடும், எடப்பாடி பழனிசாமியோடும் கைகோர்ப்பதுததான் சாலச் சிறந்த முடிவு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×