என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வால்பாறைக்கு மாலை 6 மணிக்கு பிறகு மோட்டார் சைக்கிள்கள் செல்ல தடை- வனத்துறை நடவடிக்கை
    X

    வால்பாறைக்கு மாலை 6 மணிக்கு பிறகு மோட்டார் சைக்கிள்கள் செல்ல தடை- வனத்துறை நடவடிக்கை

    • வால்பாறை மலைப்பாதையில் தற்போது காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
    • வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுலாவுக்கு பெயர் போன ஊராகும். இங்குள்ள தேயிலை தோட்டங்கள், இயற்கை காட்சிகள் மற்றும் அணைகளை கண்டுகளிக்க நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் இருப்பர்.

    வால்பாறை செல்லும் வழியில் ஆழியார் அணை, குரங்கு நீர்வீழ்ச்சி உள்ளிட்டவற்றையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து விட்டு வால்பாறைக்கு செல்வார்கள்.

    அங்குள்ள தேயிலை தோட்டங்களை பார்த்து விட்டு, அதன் முன்பு நின்று செல்பி புகைப்படமும் எடுத்துக் கொள்வார்கள்.

    கடந்த சில நாட்களுக்கு ஜெர்மனி நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணியான மைக்கேல் (வயது73), என்பவர் வால்பாறைக்கு சுற்றுலா வந்தார்.

    அவர் பொள்ளாச்சியில் இருந்து மோட்டார் சைக்கிள் மூலம் வால்பாறை நோக்கி சுற்றுலாவுக்காக பயணித்து கொண்டிருந்தார்.

    வாட்டர் பால்ஸ் அருகே சென்றபோது காட்டு யானை ஒன்று சாலையை மறித்து நின்றிருந்தது. ஆனால், மைக்கேல் யானை நிற்பதையும் தாண்டி, அந்த பகுதியை கடந்து செல்ல முயன்றார்.

    அப்போது அந்த யானை, மைக்கேலை தூக்கி வீசியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

    வால்பாறை மலைப்பாதையில் தற்போது காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    குறிப்பாக கவியருவி, நவமலை, வாய்க்கால் மேடு, 1-வது கொண்டை ஊசி வளைவு, 14-வது கொண்டை ஊசி வளைவு, அட்டகட்டி, வாட்டர் பால்ஸ், கவர்க்கல் உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் நடமாட்டம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் யானை நடமாட்டம் அதிகமாக உள்ளதை அடுத்து, பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் மாலை 6 மணிமுதல் மறுநாள் காலை 6 மணி வரை தற்காலிகமாக இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு ஆனைமலை புலிகள் காப்பக களஇயக்குனர் மற்றும் துணை கள இயக்குனர் அறிவுறுத்தலின்படி தடை விதிக்கப்பட்டுள்ளது. இது வால்பாறையில் வசிக்கும் மக்களுக்கும் பொருந்தும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×