என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சட்டவிரோத கருக்கலைப்பில் கர்ப்பிணி பலி - கணவர் உள்பட 3 பேர் கைது
- ரம்யாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
- 3-வது மாதம் என்பதால் வழக்கம் போல் தனியார் ஸ்கேன் மையத்திற்கு ரம்யாவை அழைத்து சென்றுள்ளனர்.
ஏரியூர்:
தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள பூச்சூரை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மனைவி ரம்யா (வயது 26). இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் ரம்யா மீண்டும் கர்ப்பம் தரித்தார். கடந்த 1-ந் தேதி ரம்யா மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டதாக அவரது கணவர் கண்ணன் உறவினர்களை நம்ப வைத்துள்ளார்.
இந்த நிலையில் ரம்யாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் ஏரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சுரேஷ் விசாரணை மேற்கொண்டு வந்தார். விசாரணையில் ரம்யாவிற்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளதால் அவரது கணவர் கண்ணன் சட்ட விரோதமாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை ஸ்கேன் மூலம் பரிசோதிக்க திட்டமிட்டது தெரியவந்தது.
அதன்படி சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த நர்சு சுகன்யா (35), புரோக்கர் வனிதா (35) ஆகியோருடன் சேர்ந்து ஸ்கேன் மூலம் ரம்யாவுக்கு பரிசோதனை நடத்த திட்டமிட்டு உள்ளார். இதையடுத்து 3-வது மாதம் என்பதால் வழக்கம் போல் தனியார் ஸ்கேன் மையத்திற்கு ரம்யாவை அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர் பரிசோதிக்கப்பட்டதில், அவருக்கு 3-வதும் பெண் குழந்தை என்பதை நர்சு சுகன்யா உறுதிப்படுத்தி கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து நர்சு சுகன்யா, புரோக்கர் வனிதா ஆகியோருடன் சேர்ந்து ரம்யாவிற்கு வீட்டில் வைத்து கருக்கலைப்பு செய்திட கண்ணன் திட்டமிட்டு உள்ளார். அதன்படி வீட்டில் கருக்கலைப்பின்போது ரம்யாவிற்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதால் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்துள்ளனர்.
அப்போது அவர்கள் மாடிப்படியில் இருந்து கர்ப்பிணி தவறிவிழுந்து காயம் அடைந்து விட்டதாக கூறி உள்ளனர். இதையடுத்து அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பியபோது வழியில் கர்ப்பிணி இறந்து விட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ததாக ரம்யாவின் கணவர் கண்ணன், நர்சு சுகன்யா, புரோக்கர் வனிதா ஆகிய 3 பேரையும் கைது செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.






