என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்: போதை பொருட்களை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை - போலீசார் எச்சரிக்கை
- மெரினா கடற்கரையில் புத்தாண்டையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டு உள்ளன.
- புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று மாலை முதல் நாளை வரையில் பொதுமக்கள் கடலில் இறங்கவோ, குளிக்கவோ தடை விதிக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
2025-ம் ஆண்டு இன்று இரவுடன் விடைபெற்று நள்ளிரவு 12 மணிக்கு 2026-ம் ஆண்டு பிறக்கிறது.
இதையொட்டி தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இன்று இரவு களைகட்டி காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு உள்ளன.
குறிப்பாக சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளிலும் இன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நட்சத்திர விடுதிகள் மற்றும் பண்ணை வீடுகளில் புத்தாண்டையொட்டி ஆட்டம், பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத் துக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இன்று பிற்பகலில் இருந்தே இளைஞர்கள் அதற்கு தயாரானார்கள்.
மெரினா கடற்கரையில் புத்தாண்டையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. இன்று இரவு 9 மணியில் இருந்து மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் எந்தவித வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்படாது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
நள்ளிரவு 12 மணியளவில் புத்தாண்டு பிறந்ததும் மெரினாவில் கூடியிருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஹேப்பி நியூ இயர் என உற்சாக குரல் எழுப்பி புத்தாண்டை வரவேற்கிறார்கள்.
இந்த கொண்டாட்டத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்காக சென்னை மாநகர் முழுவதும் 19 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
அனைத்து கடற்கரை பகுதிகள், கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் அனைத்திலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன.
நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் பை பாஸ் சாலை மற்றும் ஜி.எஸ்.டி. ரோடு ஆகிய பகுதிகளிலும், தாம்பரம் ஆவடி, செங்குன்றம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பைக்ரேசை கட்டுப் படுத்துவதற்காக 30 தனிப்படைகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இன்று இரவு 9 மணிக்கு பிறகு சென்னை மாநகரில் உள்ள 30 மேம்பாலங்கள் முழுமையாக மூடப்படுகிறது.
சென்னையில் உள்ள 100-க்கும் மேற்பட்ட முக்கிய கோவில்கள், தேவாலயங்கள், இதர வழிபாட்டு தலங்கள், பொது இடங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று மாலை முதல் நாளை வரையில் பொதுமக்கள் கடலில் இறங்கவோ, குளிக்கவோ தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்காக மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தற்காலிக காவல் உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
மெரினாவில் மணல் பரப்பில் இறங்குவதற்கு கூட இன்று இரவு போலீசார் அனுமதிக்க மாட்டார்கள். இதைத் தாண்டி யாராவது கடற்கரை மணல் பகுதிக்குள் நுழைவதை தடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மெரினா, சாந்தோம் பகுதி மற்றும் காமராஜர் சாலையிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு உரிய அறிவுரைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட இருக்கிறது. முக்கிய இடங்களில் டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு குற்றத் தடுப்பு நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட உள்ளன. மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் நன்கு நீச்சல் தெரிந்த வீரர்களையும் தயார் நிலையில் பணியமர்த்த உள்ளனர். கடலில் யாரும் மூழ்கிடாமல் உயிரிழப்பை தடுப்பதற்காக இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அவசர மருத்துவ உதவிக்காக மெரினாவில் முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களின் அருகில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவ குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்தி வைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் சீண்டல் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்கு சாதாரண உடைகளில் போலீசார் கண்காணிக்க உள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது தனியார் இடங்களில் கஞ்சா, அபின் உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்படுத்துவதற்கும் போலீசார் முழுமையாக தடை விதித்து உள்ளார்கள். இது தொடர்பாக சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து இருப்பவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் போதை பொருட்களை யாராவது பயன் படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தடையை மீறி யாராவது போதைப் பொருட்களை பயன்படுத்தினால் அதுபற்றி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் போலீஸ் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் புத்தாண்டு கொண்டாட் டத்தின்போது நடைபெறும் மது விருந்துகளை இரவு 1 மணிக்குள் முடித்து விட வேண்டும் என்றும், போதையில் மோட்டார் சைக்கிள்கள், கார்களை பொதுமக்கள் ஓட்டக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை மீறி யாராவது போதையில் வாகனங்களை ஓட்டினால் அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசு வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இப்படி சென்னை, கோவை, திருச்சி மதுரை, நெல்லை, கன்னியாகுமரி என அனைத்து முக்கிய மாநகர பகுதிகளிலும் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளன. தமிழகம் முழு வதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்புக்காக உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.






