என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பழனியாண்டியை எம்.எல்.ஏ. பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்ய வேண்டும் - ஆதவ் அர்ஜுனா
    X

    'பழனியாண்டியை எம்.எல்.ஏ. பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்ய வேண்டும்' - ஆதவ் அர்ஜுனா

    • கனிமவள கொள்ளையைக் கேள்விகேட்கும் பொதுமக்கள் அச்சுறுத்தப்படுவது, சமூக ஆர்வலர்கள் கொலை செய்யப்படுவது போன்ற நிலைமை தொடர்கதையாகி வருகிறது.
    • திமுக ஆட்சியின் முகங்களாக குண்டர்களும், சமூக விரோதிகளும், வன்முறையாளர்களுமே இருக்கிறார்கள்

    திமுக எம்.எல்.ஏ பழனியாண்டியை உடனடியாக பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யவேண்டும் என தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,

    மக்களாட்சியா? ரவுடிகளின் ஆட்சியா?

    கரூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் கனிமவள கொள்ளைப் பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ் செய்தியாளர் கதிரவன் மற்றும் ஒளிப்பதிவாளர் திரு. செபாஸ்டின் ஆகியோர் மீது, ஆளும் திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கொலைவெறித் தாக்குதல் நடத்திய இந்த வீடியோவை பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது.

    தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் கனிமவள கொள்ளையைக் கேள்விகேட்கும் பொதுமக்கள் அச்சுறுத்தப்படுவது, சமூக ஆர்வலர்கள் கொலை செய்யப்படுவது போன்ற நிலைமை தொடர்கதையாகி வருகிறது. இவ்வாறே, இன்றைய திமுக ஆட்சி இயற்கைவள சுரண்டலையும், வன்முறை அரசியலையும் ஆதரித்து வருகிறது. இன்று, செய்தியாளர்கள் வரை நேரடியாக மோசமாகத் தாக்கப்படுவது, இங்கு நடப்பது மக்களாட்சியா? அல்லது ரவுடிகளின் அச்சுறுத்தல் ஆட்சியா? என்றே மீண்டும் கேட்க வைக்கிறது.

    திமுக ஆட்சியின் முகங்களாக குண்டர்களும், சமூக விரோதிகளும், வன்முறையாளர்களுமே இருக்கிறார்கள் என்பதற்கு இதுபோன்ற சம்பவங்கள் உதாரணம். தொடர்ந்து, மக்கள் விரோத போக்கில் ஈடுபட்டுவரும் நபர்களை ஊக்குவித்து, அவர்களை அதிகாரத்தில் அமரவைக்கும் திமுக ஆட்சியை மக்கள் தூக்கியெறிவது உறுதி.

    செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய எம்எல்ஏ பழனியாண்டி, உடனிருந்த அவரது மகன் மற்றும் குண்டர்கள் ஆகியோர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அனைவருக்கும் சட்டத்திற்கு முன் தக்க தண்டனை பெற்றுத்தர வேண்டும். அரசு முன்வந்து பழனியாண்டியை சட்டமன்ற உறுப்பினார் பொறுப்பிலிருந்து தகுதிநீக்கம் செய்ய வேண்டும். மக்கள் பிரதிநிதி பொறுப்பை மறந்து, அராஜகத்தில் ஈடுபட்ட அவர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஜனநாயகத்தின் நான்காம் தூணான பத்திரிக்கை சுதந்திரத்தை அரசு உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கு உரிய நியாயமும் நீதியும் கிடைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×