என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பிரிந்தவர்கள் அனைவரும் ஒரே குடையின் கீழ் சேர்ந்தால் மட்டுமே அ.தி.மு.க. வெற்றி பெறும் - ஓ.பி.எஸ்.
- மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. தனித்தனியாக போட்டியிட்டதால் வாக்குகள் சிதறி, தி.மு.க. பல இடங்களில் குறைவான வாக்குகள் பெற்றிருந்தாலும் வெற்றி பெற்றது.
- அ.தி.மு.க. கூட்டணியை விரிவுபடுத்தி வலுப்படுத்துவதற்காக அமித்ஷா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
போடி:
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் சூழலில், கட்சியில் நிலவும் உட்கட்சிப் பிரச்சினைகள் தீர்ந்து, பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைவார்களா? என்ற பெரிய அரசியல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த நிலையில் போடியில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:
தமிழ்நாடு நல்லா இருக்க வேண்டும் என விரும்பும் அனைவரும் பிரிந்து இருக்கும் அ.தி.மு.க. மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்பதையே விரும்புகின்றனர்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ளதால் அ.தி.மு.க.வில் நிலவும் குழப்பங்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முடிவுகள் பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. தனித்தனியாக போட்டியிட்டதால் வாக்குகள் சிதறி, தி.மு.க. பல இடங்களில் குறைவான வாக்குகள் பெற்றிருந்தாலும் வெற்றி பெற்றது.
இந்த நிலை மீண்டும் நடைபெறக்கூடாது என்பதே பா.ஜ.க. உயர்மட்டத் தலைவர்களின் கணிப்பு. எனவே அ.தி.மு.க. கூட்டணியை விரிவுபடுத்தி வலுப்படுத்துவதற்காக அமித்ஷா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். அ.தி.மு.க.வுக்கான வாக்குகள் சிதறாமல் ஒரே குடையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதே அவரின் முதன்மை நோக்கமாக உள்ளது என்றார்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். இணைப்பு மீண்டும் சாத்தியமா என எதிர்பார்த்து இருக்கும் சூழலில், ஓ.பி.எஸி.ன் இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.






