என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சம்பிரதாயத்திற்காக மழைநீரில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதில் உடன்பாடு இல்லை - விஜய்
- எதையும் கண்டுக் கொள்ளாமல் ஒரு அரசு மேலிருந்து நம்மை ஆட்சி செய்கிறது.
- அம்பேத்கர் அவர்கள் பார்த்தால் வெட்கப்பட்டு தலைகுனிந்து போவார்.
சென்னையில் நடைபெற்ற அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய த.வெ.க. தலைவர் விஜய், சம்பிரதாயத்திற்காக மழைநீரில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதில் தனக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர், "இன்று மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவை எதையும் கண்டுக் கொள்ளாமல் ஒரு அரசு மேலிருந்து நம்மை ஆட்சி செய்கிறது. அங்கு தான் அரசு அப்படி இருக்கிறது என்றால், இங்கு இருக்கும் அரசு எப்படி இருக்கிறது?"
"இங்க நம் வேங்கைவயல் என்ற ஊரில் என்ன நடந்தது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். சமூகநீதி பேசும் இங்குள்ள அரசு அதற்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இத்தனை வருடங்கள் கழித்தும் ஒரு துரும்பையும் கிள்ளி போடவில்லையே. இதையெல்லாம் இன்று அம்பேத்கர் அவர்கள் பார்த்தால் வெட்கப்பட்டு தலைகுனிந்து போவார்."
"இன்று நடக்கும் பிரச்சினைகள், கொடுமைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும். ஆனால் நடக்கும் பிரச்சினைகள் ஒன்றா, இரண்டா? பெண் குழந்தைகளுக்கு எதிராக, பெண்களுக்கு எதிராக, ஏன் மனித உயிர்களுக்கு எதிராக. இதையெல்லாம் நாம் படிக்கிறோம், பார்த்து, மற்றவர்களிடம் இருந்து கேட்டு தெரிந்து கொள்கிறோம்."
"இவை எல்லாவற்றுக்குமான தீர்வு என்ன தெரியுமா? நம் தமிழ்நாட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பாதுகாப்புடன், முறையாக, முழுமையாக அளிக்கும், மக்களை உண்மையாகவே நேசிக்கும் ஒரு நல்ல அரசு. இது அமைந்தாலே போதும், இதைத் தான் மிகவும் எளிமை என்று கூறினேன்."
"இங்கு தினந்தோரும் நடக்கும் பிரச்சினைகளுக்கு சம்பிரதாயத்திற்காக ட்வீட் போடுவதும், சம்பிரதாயத்திற்காக அறிக்கை விடுவதும், சம்பிரதாயத்திற்காக நானும் மக்களோடு மக்களாக இருக்கிறேன் என்று காட்டிக் கொள்வதும், சம்பிரதாயத்திற்காக மழை நீரில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதும் என்று எனக்கு அதில் கொஞ்சமும் உடன்பாடு இல்லை. ஆனால், நாமும் சில சமயங்களில் சம்பிரதாயத்திற்காக இதையெல்லாம் சில நேரங்களில் செய்ய வேண்டியதாகி விடுகிறது."
"மக்கள் உரிமைகளுக்காகவும், அவர்களோடு உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டும். என்னை அவர்களின் குடும்பத்தில் ஒருத்தராக நினைக்கும் ஒவ்வொருத்தருக்கும், தமிழ்நாட்டில் அவர்களுக்கு எங்கு, என்ன பிரச்சினை நடந்தாலும் அவர்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் உணர்வுப்பூர்வமாக இருப்பேன்," என்று தெரிவித்தார்.






