என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தீபாவளிக்கு பிறகு தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை- தமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு
    X

    தீபாவளிக்கு பிறகு தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை- தமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு

    • அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
    • சென்னை உள்பட பல இடங்களில் பெய்து வரும் மழை நாளை முதல் சற்று குறையவே வாய்ப்புகள் உள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியுள்ளது. முதல் நாளே சென்னை உள்பட பல இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலையில் 30 நிமிடங்களுக்கும் மேலாக மழை கொட்டி தீர்த்தது. இரவிலும் விட்டு விட்டு பெய்த மழை காலையிலும் நீடித்தது.

    இந்த நிலையில் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    இந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகளால் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும்? எப்போது தீவிரமடையும்? என்பது பற்றி தனியார் வானிலை ஆய்வாளரான ஹேமச்சந்திரன் விளக்கி உள்ளார்.

    அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் கேரளம், தெற்கு கர்நாடக பகுதியில் நாளை (18-ந்தேதி) உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பெரிய அளவில் மழைப்பொழிவு இருக்காது. சென்னை உள்பட பல இடங்களில் பெய்து வரும் மழை நாளை முதல் சற்று குறையவே வாய்ப்புகள் உள்ளன.

    இதனால் வருகிற 19, 20 ஆகிய தேதிகளில் பெரிய அளவில் மழை இருக்காது. தீபாவளிக்கு பிறகு, வருகிற 24-ந்தேதி வங்கக்கடலில் உருவாக உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளது.

    இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறக் கூடும். இதனால் 23-ந்தேதியில் இருந்தே வடகிழக்கு பருவமழை தீவிரமடைவதற்கான சூழல் உள்ளது.

    இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை 23-ந்தேதியே முழுமையாக கணிக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இருப்பினும் வங்கக்கடலில் உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் வடகடலோர மாவட்டங்களில் 23-ந்தேதியில் இருந்து பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

    Next Story
    ×