என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

'திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கேற்றுவதை யாராலும் தடுக்க முடியாது' - தர்மேந்திர பிரதான்
- மலை மீது தீபமேற்றுவதை தடுக்க நினைப்பவர்களை சிவன் பார்த்துக் கொள்வார்
- ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் கூட, புதிய கல்விக் கொள்கை விரைவில் நடைமுறைக்கு வரும்
காசி தமிழ் சங்கமத்தின் நிறைவு விழா நேற்று ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாடு வருகைதந்தார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையும் ஆற்றினார். இந்நிலையில் இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
"காசி தமிழ் சங்கமத்தின் நான்காவது பதிப்பை நாங்கள் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளோம். நேற்று, ராமேஸ்வரத்தில் இதன் நிறைவு விழாவை வெற்றிகரமாக நடத்தினோம். அதில் இந்திய குடியரசுத் துணைத் தலைவர் உரையாற்றினார். இந்த காசி தமிழ் சங்கமம் என்பது நம் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு, குறிப்பாக காசி மற்றும் ராமேஸ்வரத்திற்கு இடையிலான கலாச்சார மற்றும் நாகரீக பிணைப்பின் அடையாளமாகும். தற்போது இதில் ஏராளமான மக்கள் பங்கேற்கின்றனர். வருங்காலத்தில், 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' (Ek Bharat, Shreshtha Bharat) திட்டத்தின் கீழ் இன்னும் சிறப்பான கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்படும்.
நாட்டின் இரு பகுதிகளுக்கு இடையே இத்தகைய சிறந்த கலாச்சார பாலத்தை உருவாக்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் இப்போது தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தி வருகிறோம். தமிழ்நாட்டில், ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் பயிற்று மொழியாக இருக்க வேண்டும். இது தேசிய கல்வி கொள்கையின் பரிந்துரையாகும். மாநில அரசு ஆரம்பக் கல்வியில் தமிழ் மொழியை ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன். நாம் குழந்தைகளைச் சரியாகக் கவனித்துக்கொண்டால், அவர்கள் நமது சமூகத்தின் எதிர்காலத் தலைவர்களாக விளங்குவார்கள். என தெரிவித்தார்.
தொடர்ந்து திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், 'திருப்பரங்குன்றம் மலை மீது விளக்கேற்றுவதைத் தடுக்க முடியாது. மலை மீது தீபமேற்றுவதை தடுக்க நினைப்பவர்களை சிவன் பார்த்துக் கொள்வார். இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக தமிழ்நாடு அரசு கையாள்வது கண்டிக்கத்தக்கது' என தெரிவித்தார்.
முன்னதாக நேற்று விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் கூட, புதிய கல்விக் கொள்கை விரைவில் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்திருந்தார்.






