என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நெல்லை கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
    X

    நெல்லை கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

    • கால்நடை மருத்துவக்கல்லூரியில் மாணவ-மாணவிகள் நூற்றுக்கணக்கானோர் இன்று காலை முதல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • நாங்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம்.

    நெல்லை:

    தமிழகத்தில் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையமானது சென்னை, நாமக்கல், நெல்லை, ஒரத்தநாடு, சேலம், உடுமலைப்பேட்டை உள்பட 7 இடங்களில் செயல்பட்டு வருகிறது.

    இந்த கால்நடைக்கல்லூரிகளில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 680 பேர் வரை படிப்பை முடித்துவிட்டு வெளியே வருகின்றனர். ஒவ்வொரு கல்லூரியிலும் ஓராண்டுக்கு 100 பேர் வீதம் மொத்தம் 500 பேர் வரை படித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது சற்று குறைவாகவே இருந்து வரும் நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு அரசு புதிதாக 3 தனியார் கால்நடை கல்லூரிகளை தொடங்க அனுமதி அளிக்க பரிசீலனை செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மருத்துவ கவுன்சிலும் தனியார் கல்லூரிகள் தொடங்க வேண்டாம் என்று பரிந்துரை செய்தது.

    ஆனாலும் அரசு அதனை ஏற்காமல் இந்த திட்டமானது அரசின் கொள்கை முடிவு என கூறி, புதிதாக தனியார் கால்நடை மருத்துவகல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மாணவ-மாணவிகள் இன்று ஒருநாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    தமிழகம் முழுவதும் உள்ள 7 கல்லூரிகளிலும் தனியார் கல்லூரிகளை தொடங்குவதை கண்டித்து இந்த போராட்டம் நடைபெறும் நிலையில், நெல்லையில் சங்கரன்கோவில் சாலையில் ராமையன்பட்டியில் அமைந்துள்ள கால்நடை மருத்துவக்கல்லூரியில் மாணவ-மாணவிகள் நூற்றுக்கணக்கானோர் இன்று காலை முதல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதுதொடர்பாக மாணவர்கள் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக அரசு புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படாத நிலையில், ஆண்டுக்கு 680 பேர் வரை படித்து முடித்து வெளியே வருகிறோம். நாங்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம்.

    இந்த நிலையில் மேலும் புதிதாக தனியாருக்கு கல்லூரி தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அரசு அந்த முடிவை கைவிட வலியுறுத்தி இன்று வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்துகிறோம். மேற்கொண்டு போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.

    Next Story
    ×