என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நாடு முழுவதும் ஊழியர்கள் வேலைநிறுத்தம்: வங்கி சேவை பாதிப்பு
- வங்கியில் பணத்தை செலுத்தவோ, எடுக்கவோ முடியாமல் வாடிக்கையாளர்கள் கஷ்டப்பட்டனர்.
- அதிகாரிகள், ஊழியர்கள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை:
வங்கி அதிகாரிகள் ஊழியர்கள் நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை நாட்களாக அறிவிக்க வேண்டும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை விடப்பட வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை வலியுறுத்தி 8 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் இந்த வேலைநிறுத்தத்தை இன்று ஒரு நாள் மேற்கொண்டுள்ளனர்.
இதனால் வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. ஒரு சில வங்கிகள் மட்டுமே திறந்திருந்தன. அதில் அதிகாரிகள் மட்டும் பணிக்கு வந்திருந்தனர். பெரும்பாலான வங்கிக் கிளைகள் மூடப்பட்டிருந்ததால் வங்கி சேவை இன்று கடுமையாக பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள 16,000 வங்கிக் கிளைகள் இன்று செயல்படாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். ஏற்கனவே சனி, ஞாயிற்றுக்கிழமையோடு குடியரசு தினம் விடுமுறையும் சேர்ந்து 3 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து இன்று வங்கி ஊழியர்கள் போராட்டம் நடைபெற்றதால் 4 நாட்கள் வங்கிகள் செயல்படவில்லை. இதனால் வங்கியில் பணத்தை செலுத்தவோ, எடுக்கவோ முடியாமல் வாடிக்கையாளர்கள் கஷ்டப்பட்டனர்.
வர்த்தக பிரமுகர்கள், தொழில் நிறுவனங்கள் காசோலைகள், பண பரிவர்த்தனை செய்ய முடியாமல் முடங்கின. தமிழ் நாட்டில் மட்டும் சுமார் ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள காசோலை இன்று ஒரு நாளில் முடங்கியதாக கூறப்படுகிறது. 4 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டு இருப்பதால் அந்நிய செலாவணி பரிமாற்றம் பாதிக்கப்பட்டது.
வங்கி ஏ.டி.எம்.மில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பணமும் தீர்ந்து போனதால் பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் சிரமப்பட்டனர்.
வங்கி ஊழியர்களின் போராட்டத்தால் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் கூட்டுறவு வங்கிகள் இன்று செயல்படவில்லை.
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் சார்பாக இந்த வேலைநிறுத்தம் நடக்கிறது. அங்கே அதிகாரிகள், ஊழியர்கள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.எச். வெங்கடாசலம் கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றாமல் இழுத்து அடித்து வருகிறது. மத்திய, மாநில அரசின் நிதி நிறுவனங்கள், ரிசர்வ் வங்கி, எல்.ஐ.சி, பொது காப்பீடு மற்ற அனைத்து துறைகளிலும் வாரத்தில் 5 நாட்கள் வேலைமுறை அமலில் உள்ளது.
ஆனால் வங்கிகளுக்கு 2 சனிக்கிழமை மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. 2023-ம் ஆண்டு தொழிற்சங்கங்கள் பேசி திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை கூடுதலாக 40 நிமிடங்கள் வேலை நேரத்தை அதிகரித்து ஒப்பு தல் அளிக்கப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் பரிந்துரை செய்யப்பட்ட கோரிக்கை ஏற்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
எனவே 5 நாட்கள் வேலை நடைமுறைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நாடு முழுவதும் இன்று நடக்கிறது. வங்கி ஊழியர்கள் போராட்டத்தால் வங்கி சேவை இன்று கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. வாடிக்கையாளர்கள் பணம் டெபாசிட் செய்ய முடியாமலும், எடுக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதர வங்கி சேவைகளும் முடங்கியுள்ளது. இதற்கு மத்திய அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும். 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கோரிக்கையை நிறைவேற்றாமல் இருப்பதனால் அதற்கான முழு பொறுப்பையும் மத்திய அரசு ஏற்க வேண்டும். இதனால் ஏற்படுகின்ற சிரமங்களுக்காக வருந்துகிறோம். மத்திய அரசு இந்த கோரிக்கையை ஏற்று பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






