என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

போலி மருந்து தொழிற்சாலையுடன் தொடர்பு இருந்தால் என்னை கைது செய்யுங்கள்- நாராயணசாமி ஆவேசம்
- போலி மருந்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
- மருந்தகங்களில் சோதனை நடத்தி போலிகளை கண்டறிந்து களைய வேண்டும்.
புதுச்சேரி:
புதுவையில் போலி மருந்து தொழிற்சாலை நடத்த உதவிய அரசியல்வாதிகளை கைது செய்ய வேண்டும்.
சி.பி.ஐ. விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும். இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் சார்பில் நேருவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
போலி மருந்து விவகாரத்தில் முக்கிய நபரான ராஜா சபாநாயகருக்கு நெருக்கமாக இருந்துள்ளார். பா.ஜ.க., என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் பரிவர்த்தனை நடந்துள்ளது. ராஜா வீட்டில் கண்டெடுக்கப்பட்ட டைரியில் அரசியல்வாதிகள் பணம் பெற்ற தகவல் உள்ளது. 22 கார்களை அரசியல்வாதிகளுக்கு கொடுத்துள்ளார்.
போலி மருந்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மருந்தகங்களில் சோதனை நடத்தி போலிகளை கண்டறிந்து களைய வேண்டும்.
உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், போலி மருந்து தொழிற்சாலைக்கு நான் அனுமதி வழங்கியதாக கூறியுள்ளார். நான் சி.பி.ஐ. உட்பட எந்த விசாரணைக்கும் தயாராக உள்ளேன். இதில் எனக்கு பங்கு இருந்தால், அரசியலை விட்டே விலகுகிறேன். என் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யட்டும்.
நான் ஆட்சியில் இருந்தபோது அனுமதி கொடுத்ததாக கூறும் நமச்சிவாயம், அரசில் 2-வது அமைச்சராகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார்.
அப்போதே இதை சொல்லி ஆட்சியிலிருந்து வெளியேறி இருக்க வேண்டியதுதானே? உங்கள் சொத்து தொடர்பான விசாரணைக்கு தயாரா?
போலி மருந்து தொழிற்சாலையை ராஜா 2021-ல் சபாநாயகர் தொகுதியில் ஆரம்பித்துள்ளார். அதற்கான ஆதாரம் உள்ளது. அவர் நடத்திய தொழிற்சாலை சபாநாயகர் ஆசீர்வாதத்தோடும், என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. அரசியல்வாதிகளின் ஆசியோடும் நடந்துள்ளது. ரூ.2 ஆயிரம் கோடிக்கு மாத்திரை விநியோகம் செய்துள்ளனர். போலி மருந்து விவகாரத்தில் முதல்-அமைச்சர், சபாநாயகர், அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






