என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சபரிமலையில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் பல மொழி அடங்கிய தகவல் தொடர்பு செயலி விரைவில் அறிமுகம்
    X

    சபரிமலையில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் பல மொழி அடங்கிய தகவல் தொடர்பு செயலி விரைவில் அறிமுகம்

    • நிலக்கல்லில் வழக்கமாக நடப்பாண்டு 1500 வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • இந்த ஆண்டு கேரள அரசு சார்பில் 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    கூடலூர்:

    பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக வருகிற நவம்பர் 17-ந் தேதி நடை திறக்கப்பட்டு டிசம்பர் 27-ந் தேதி வரை பூஜைகள் நடைபெற உள்ளது.

    ஒரு மண்டலம் விரதம் இருந்து அய்யப்பனை தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள். அதனைத் தொடர்ந்து மகரவிளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

    இந்நிலையில் பக்தர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்து தேவசம்போர்டு செயலர் ராஜமாணிக்கம் கூறியதாவது:-

    சபரிமலைக்கு வரும் பக்தர்கள் தற்போது ஆன்லைன் மூலம் பல்வேறு சேவைகளை பெற்று வருகின்றனர். அவர்கள் வசதிக்காக ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய பலமொழி தகவல் தொடர்பு செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் தரிசனம், தங்கும்வசதி, அவசரதேவை, மருத்துவவசதி, காலநிலை உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு தகவல்களையும் அதில் குறிப்பிட்டுள்ள எண்களை தொடர்பு கொண்டு பயனடையலாம்.

    நிலக்கல்லில் வழக்கமாக நடப்பாண்டு 1500 வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வாகன பாதுகாப்பு, தடையற்ற இயக்கத்தை கண்காணிக்கும் வகையில் புதிதாக 3 கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படும். இங்கிருந்து பத்தினம்திட்டா, எரிமேலி உள்ளிட்ட முக்கிய வழித்தடங்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்.

    இந்த ஆண்டு கேரள அரசு சார்பில் 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். நிலக்கல்-பம்பை இடையே சுழற்சி முறையில் 24 மணி நேரமும் இந்த பஸ்கள் இயங்கும். இதய பாதிப்பு உள்ளிட்ட குறிப்பிட்ட நோய்களுக்கு உயர்தர மருத்துவ சேவைகள் தேவசம்போர்டு சார்பில் வழங்கப்படும். இதற்கான நிதி ஆதாரத்துக்காக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களிடம் விருப்ப கட்டணமாக ரூ.5 பெறப்படும்.

    பதிவு செய்யும் பக்தர்கள் கேரளாவுக்குள் நுழைந்து வெளியேறும் வரை காப்பீட்டு திட்டத்தில் பல்வேறு வசதிகளை பெற இயலும். கூட்ட நெரிசலை தவிர்க்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நேரடி புக்கிங் செய்பவர்கள் நெரிசல் இல்லாத நேரங்களில் தரிசனத்துக்கு அனுப்பப்படுவார்கள். எனவே இயன்ற வரை ஸ்பார்ட் புக்கிங் செய்வதை தவிர்க்க வேண்டும். பக்தர்களுக்கு செய்து தர வேண்டிய மேலும் சில பாதுகாப்பு வசதிகள் குறித்து தேனி, இடுக்கி மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×