என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பெற்றோரை இழந்து தவிக்கும் 4 பிள்ளைகளில் ஒருவருக்கு அரசு வேலை - இந்த குழந்தைகளை அரசு கைவிடாது: எ.வ.வேலு
    X

    பெற்றோரை இழந்து தவிக்கும் 4 பிள்ளைகளில் ஒருவருக்கு அரசு வேலை - இந்த குழந்தைகளை அரசு கைவிடாது: எ.வ.வேலு

    • லாவண்யா அரசு வேலை இருந்தால் குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
    • அரசு சார்ந்த அலுவலகத்தில் தற்காலிக பணி கொடுக்க முடிவு செய்துள்ளோம்.

    சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி கமலக்கண்ணன் (வயது 46) சிறுநீரக நோயால் கடந்த 14-ந்தேதி அன்று உயிரிழந்தார். அவருடைய மனைவி வசந்தா கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார்.

    இந்த நிலையில் கமலக்கண்ணன் உடலை அடக்கம் செய்வதற்கு பணம் இல்லாமல் அவருடைய மகள்கள் லாவண்யா (24), ரீனா (21), ரிஷிகா (17), மகன் அபினேஷ் (13) ஆகியோர் பரிதவித்தனர். அவர்கள் குடும்ப வறுமையை கண்டு கிராம மக்கள் வீடு வீடாக பணம் வசூலித்து கமலக்கண்ணனின் இறுதி சடங்கை செய்தனர்.

    நெஞ்சை உருக்கும் இந்த செய்தி பத்திரிகையில் நேற்று வெளியானது. இந்த செய்தி பலரது மனதை கலங்கடிக்க செய்தது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் இந்த செய்தியை படித்து பார்த்து கலங்கி உள்ளார். உடனே அவர், கமலக்கண்ணின் மூத்த மகள் லாவண்யாவிடம் செல்போனில் உருக்கமாக பேசி ஆறுதல் கூறி தன்னம்பிக்கை அளித்தார்.

    மாணவி லாவண்யாவுக்கு செல்போனில் ஆறுதல் கூறிய உரையாடலை சமூக வலைத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அத்துடன் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

    இந்த 4 குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள். அவர்களது எதிர்காலத்தை அரசு பாதுகாக்கும். இந்த செய்தியை 'தினத்தந்தி'யில் படித்ததுமே, மாவட்ட கலெக்டரை அழைத்து அவர்களது தேவைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிய சொன்னேன். நானும் தொலைபேசியில் அவர்களிடம் பேசி, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்து துணை நிற்போம் என உறுதியளித்தேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதையடுத்து அமைச்சர் எ.வ.வேலுவும் நேரில் அவர்களை சந்தித்து, அவர்களுக்குத் தேவையான உடனடி நிதியுதவியை வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

    லாவண்யா அரசு வேலை இருந்தால் குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ரீனா ஐ.டி. படித்து இடையில் நின்றுள்ளார். அவரும் படிப்பை விரும்புகிறார். ரிஷிகா 10-வதோடு இடையில் நின்றுள்ளார். அவரும் படிப்பை தொடர விரும்புகிறார். அபினேஷ் படிக்க விரும்புகிறார்.

    மாவட்ட ஆட்சியரும் நானும் ஆலோசனை நடத்தி, ரிஷிகாவையும், அபினேஷையும் அன்புக்கரங்கள் திட்டத்தில் சேர்த்து படிக்க வைக்க உள்ளோம். ரீனா ஐ.டி. படிப்பை தொடருவார்.

    அரசு சார்ந்த அலுவலகத்தில் தற்காலிக பணி கொடுக்க முடிவு செய்துள்ளோம். பிறகு நிரந்தர பணி ஏற்பாடு செய்யப்படும். அரசு சார்பாக இந்த பணிகளை செய்துள்ளோம்.

    அந்த குடும்பத்தினரின் பொருளாதார இழப்பை ஈடுசெய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.1 லட்சம் பொருளாதார உதவி அளித்துள்ளோம்.

    இந்த குடும்பத்தை பொறுத்தவரை முதலமைச்சரின் ஆலோசனைப்படி அரசு சார்பாக என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அந்த உதவிகளை செய்வோம். எந்த காரணத்தை கொண்டும் இந்த குழந்தைகளை அரசு கைவிடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×