என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வனப்பரப்பை அதிகரிப்பதில் தமிழகம் முன்னணியில் உள்ளது- அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதி
    X

    வனப்பரப்பை அதிகரிப்பதில் தமிழகம் முன்னணியில் உள்ளது- அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதி

    • மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி 33 சதவீத வனப்பரப்பு என்ற இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    • குமரி மாவட்டத்தில் ரப்பர் பூங்கா அமைப்பது குறித்து தற்போது முடிவெடுக்கப்படவில்லை.

    நாகர்கோவில்:

    தமிழக வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் குமரி மாவட்டம் வந்தார். அவர் நாகர்கோவில் வடசேரியில் உள்ள அரசு ரப்பர் கழகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ரப்பர் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து அவர் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசு ரப்பர் கழகத்தின் தற்போதைய நிலை மற்றும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது கூட்டத்தில் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. அதன் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகள் வருகிற 17-ந்தேதி மதுரை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிக்கப்படும்.

    அரசு ரப்பர் கழகத்தில் 20 ஆண்டுகளாக பணிபுரியும் சி.எல்.ஆர் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பான கோரிக்கை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் குரங்கு தொல்லை இருப்பதாக புகார்கள் வந்துள்ளன. அவற்றை கூண்டுகள் வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்கப்படும். சிங்கவால் குரங்குகள் மலைப்பகுதிகளில் வசிப்பவை என்பதால், அவை மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வராது.

    வனப்பரப்பை அதிகரிப்பதில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி 33 சதவீத வனப்பரப்பு என்ற இலக்கை எட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் ரப்பர் பூங்கா அமைப்பது குறித்து தற்போது முடிவெடுக்கப்படவில்லை. அடுத்த முறை தி.மு.க. ஆட்சி தான் தொடரும். எனவே எதிர்காலத்தில் இது குறித்து பரிசீலிக்கப்படும்.

    கேரளாவில் தனியார் காடுகள் சட்டம் அமலில் உள்ள இடங்களில் பணிகள் செய்ய கெடுபிடி காட்டுவது இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் கேரளாவில் உள்ள சட்ட திட்டங்களுக்கும், தமிழகத்தில் உள்ள சட்டங்களுக்கும் வேறுபாடு உள்ளது. கேரளாவில் அதிக மலைகள் உள்ளன. இங்கு மலைகள் குறைவு. நமது சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    தனியார் காடுகள் சட்டத்தினால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

    ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ், கலெக்டர் அழகுமீனா, வன அலுவலர் அன்பு, எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், தாரகை கத்பர்ட், உணவு ஆணைய தலைவர் சுரேஷ்ராஜன், மேயர் மகேஷ், அரசு ரப்பர் கழக தலைவர் சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்த், மண்டல தலைவர் ஜவகர், மாவட்ட துணை செயலாளர் பூதலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×