என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு - ரெயிலில் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
- இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர்.
- ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பத்தை சேர்ந்தவர் ரஞ்சித் குமார். இவரது மகன் கோகுல் என்கிற நித்தின் ராகுல் (வயது 20). இவர் கர்நாடகாவில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார்.
ஜோலார்பேட்டை அருகே உள்ள காவேரி பட்டு பகுதியை சேர்ந்தவர் அணுமுத்து. இவரது மகள் தரணி (வயது 20 ). இவரும் நித்தின் ராகுலும் நர்சிங் கல்லூரியில் ஒன்றாக படித்து வந்தனர்.
அப்போது பழக்கம் ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர். இதில் தரணி 9 மாத கர்ப்பம் ஆனார்.
இந்த நிலையில் நித்தின் ராகுல் இவர்களது காதல் விவகாரத்தை பெற்றோரிடம் தெரிவித்தார். ஆனால் அவர்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனால் மன வேதனை அடைந்த நித்தின் ராகுல் நேற்று இரவு பெரியாங்குப்பம் பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார். அவர் மீது ரெயில் மோதியதில் இறந்தார்.
இதை அறிந்த தரணி, இன்று காலை வாணியம்பாடி ரெயில் நிலையத்திற்கு சென்றார். திருவனந்தபுரம் சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதில், தரணியின் வயிற்றில் இருந்த குழந்தை சிதறி கீழே விழுந்தது. இந்த சம்பவத்தை அறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காதல் ஜோடி அடுத்தடுத்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.






