என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கள்ளக்காதல் விவகாரத்தில் வடமாநில வாலிபர் கொலை- விசாரணையில் பரபரப்பு தகவல்
    X

    கள்ளக்காதல் விவகாரத்தில் வடமாநில வாலிபர் கொலை- விசாரணையில் பரபரப்பு தகவல்

    • கொலை செய்யப்பட்ட நபர் உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது பைசல் என தெரிய வந்தது.
    • போலீசார் இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சித்தோடு:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த ஆட்டையாம்பாளையம் அருகே கீழ் பவானி கிளை வாய்க்கால் மதகு பகுதியில் வெள்ளை நிற சாக்கு மூட்டை ஒன்று மிதந்து கொண்டு இருந்தது. அதிலிருந்து துர்நாற்றம் வீசியது.

    இது குறித்து அப்பகுதி மக்கள் சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாக்கு மூட்டையை திறந்து பார்த்தனர். அதில் 25 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபரின் உடல் அழுகிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இறந்த நபரின் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் இருந்தது தெரிய வந்தது. போலீசார் விசாரணையில் அந்த நபர் அடித்துக் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டை கட்டி வாய்க்காலில் வீசப்பட்டது தெரிய வந்தது. இறந்த நபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? போன்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.

    போலீஸ் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன் விவரம் வருமாறு:-

    கொலை செய்யப்பட்ட நபர் உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது பைசல் (22) என தெரிய வந்தது. இவருடன் அதே மாநிலத்தைச் சேர்ந்த முகமது நூர் (26) மற்றும் 18 சிறுவன் என மூன்று பேர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் நெச்சிப்பாளையம் புதூர் பகுதியில் வந்து அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கி துணியை அரைத்து நூலாக செய்யும் வேலையில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் முகமது பைசலுக்கு முகமது நூர் மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் தெரிந்து முகமது நூர், முகமது பைசலை கண்டித்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி முகமத் பைசல், முகமது நூர் மற்றும் 18 வயது சிறுவன் மூன்று பேரும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக முகமது பைசலுக்கும், முகமது நூறுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரத்தில் முகமது நூர் மற்றும் சிறுவன் இருவரும் சேர்ந்து முகமது பைசலை தலையின் பின் பக்கம் கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் இருவரும் முகமது பைசல் உடலை வெள்ளை நிற சாக்கு பையில் கட்டி வாய்க்காலில் வீசியது தெரிய வந்தது. இந்த கொலையில் மேலும் யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தொடர்ந்து போலீசார் இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×