என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தெரியாத எண்ணில் இருந்து செல்போனுக்கு அழைப்பு வந்தால்... தொலை தொடர்பு அமைச்சகம் சார்பில் புதிய வசதி அமல்
    X

    தெரியாத எண்ணில் இருந்து செல்போனுக்கு அழைப்பு வந்தால்... தொலை தொடர்பு அமைச்சகம் சார்பில் புதிய வசதி அமல்

    • இந்த வசதி '4ஜி' அலைக்கற்றை சேவையில் இருந்து படிப்படியாக பிற அலைக்கற்றைகளுக்கும் கொண்டுவரப்பட உள்ளது.
    • அரசு இதற்கான அறிவிப்பாணையை வெளியிட்ட 6 மாதங்களுக்குள் தொலைதொடர்பு நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கவேண்டும்.

    இந்தியாவில் தகவல் பரிமாற்றத்துக்காக 120 கோடிக்கும் அதிகமானோர் செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் சுமார் 95 கோடி பேர் தங்களது ஸ்மார்ட்போன்களில் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். செல்போன் பயன்படுத்துபவர்களை குறிவைத்து மோசடி கும்பல் பல்வேறு விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.

    மோசடி வலையில் சிக்கி நிதி இழப்பு ஏற்பட்டதாக அன்றாடம் பதிவாகி வரும் சம்பவங்களே இதற்கு சாட்சி. இது ஒருபுறம் இருக்க செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு, தனியார் நிதி நிறுவனங்களிடம் இருந்தும், தொலைதொடர்பு நிறுவனங்களிடம் இருந்தும் அவ்வப்போது அழைப்புகள் வந்து வீண் தொல்லை கொடுக்கின்றன.

    இந்த சூழலில் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) மற்றும் தொலைதொடர்பு அமைச்சகம் ஆகியவை இணைந்து முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து செல்போனுக்கு வரும் அழைப்புகளை அடையாளம் காண புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளன. அதன்படி, செல்போனில் சேமித்து வைக்காத எண்களில் இருந்து அழைப்பு வரும்போது, அழைப்பு வரும் எண்களுடன் சேர்த்து அந்த சிம் கார்டை பயன்படுத்துபவரின் பெயர் விவரமும் பதிவாகும்.

    இந்த வசதி '4ஜி' அலைக்கற்றை சேவையில் இருந்து படிப்படியாக பிற அலைக்கற்றைகளுக்கும் கொண்டுவரப்பட உள்ளது. மோசடி மற்றும் சிரமத்தை கொடுக்கும் விரும்பாத அழைப்புகளுக்கு செல்போன் எண்ணோடு பெயரும் வரும் வகையிலான இந்த சேவை கடிவாளம் போடும் வகையில் இருக்கும். இதனால் தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை இனி அடையாளம் கண்டு பயமின்றி எடுக்கலாம்.

    தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் தொலைதொடர்பு அமைச்சகம் ஆகியவை இணைந்து இந்த வசதியை அறிமுகப்படுத்த ஒருமித்த கருத்தை எட்டும் முயற்சியில் இறங்கியுள்ளன.

    விரைவில் 2 அமைப்புகளும் இந்த திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுத்து, அமலுக்கு கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகின்றன. அரசு இதற்கான அறிவிப்பாணையை வெளியிட்ட 6 மாதங்களுக்குள் தொலைதொடர்பு நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    Next Story
    ×