என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடியாக பணி நியமனம் வழங்க உயர்நீதிமன்றம் அனுமதி
    X

    2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடியாக பணி நியமனம் வழங்க உயர்நீதிமன்றம் அனுமதி

    • நேரடி தேர்வுக்கு எதிராக மேல்முறையீடு.
    • இந்த வழக்கில் தமிழக அரசு, பணி நியமனம் வழங்கலாம் என அனுமதி அளித்துள்ளது.

    பட்டதாரி ஆசிரியர்களை நேரடி நியமனம் செய்யும் தமிழ்நாடு அரசின் முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் தங்களுக்கு சேர வேண்டிய 2% ஒதுக்கீடு இல்லாமல் நியமன ஆணை வழங்கக் கூடாது என ஆசிரியர் அல்லாதோர் முறையீடு செய்திருந்தனர்.

    இந்த வழக்கு விசாரணையில் 2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு உடனடி பணி நியமனம் வழங்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அனுமதி அளித்துள்ளது.

    தமிழ்நாட்டில் காலியாக இருந்த பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு நேரடித் தேர்வு நடத்தி, 2500 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், அவர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கப்படாமல் இருந்தது. இதற்கிடையில், ஆசிரியர்கள் அல்லாத அமைச்சுப் பணியாளர்களுக்கு 2% இடஒதுக்கீடு வழங்காமல், நேரடித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்குப் பணி நியமனம் வழங்கக் கூடாது என அமைச்சுப் பணியாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 2500 பேருக்குப் பணி நியமனம் செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

    தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, நேரடியாகத் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் மேல்முறையீடு செய்தனர். நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், ஹேமந்த் சந்திரகவுடர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது. மேல்முறையீட்டாளர்கள் தரப்பில், "தனி நீதிபதியின் இடைக்காலத் தடையால் 2500 பேரின் பணி நியமனம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தடையை நீக்கி, அவர்களுக்குப் பணி நியமனம் வழங்க உத்தரவிட வேண்டும்" என வாதிடப்பட்டது.

    தமிழ்நாடு அரசின் தரப்பில், "நேரடித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்குப் பணி நியமன உத்தரவுகள் தயாராக உள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 2500 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் உடனடியாகப் பணி நியமன உத்தரவுகளை வழங்கலாம் என தமிழ்நாடு அரசுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டனர். பணி நியமனம் செய்தது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

    Next Story
    ×