என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னை-புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை: 2 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
- வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு உள்ளிட்டவை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
- கால்வாய் முறையாக பராமரிக்கப்படாததால் கால்வாயின் பெரும் பகுதி காணாமல் போய்விட்டது.
சென்னை:
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து டிட்வா புயலாக மாறியது. இந்த புயல் கரையை நெருங்காமல் கடலோர பகுதிகள் வழியாக பயணித்த நிலையில் வறண்ட காற்று கலந்ததால் மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.
சென்னைக்கு அருகே 30 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியது.
'டிட்வா' புயல் வலுவிழந்த போதிலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், கடந்த 3 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையின் பல பகுதிகளில், இன்றும் வெள்ள நீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது.
சென்னை புறநகர் பகுதியான செங்குன்றம், புழல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கன மழை கொட்டியது. இதனால் தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளை மழை நீர் சூழ்ந்தது.
இரவு முழுவதும் இப்பகுதியில் இடைவிடாது மழை கொட்டி தீர்த்தது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த பகுதியில் பாலாஜி அவென்யூ என்ற இடம் அருகே உள்ள ஆர்.சி. கட்டிடத்தின் பின்புறம் கால்வாய் கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் மழை வெள்ளம் குடியிருப்புகளை சூழ்ந்தது.
புழல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாடியநல்லூர் ஊராட்சி பாலாஜிநகர், குமரன்நகர், சன்சிட்டி நகர், விளாங்காடு பாக்கம் ஊராட்சி மல்லிமா நகர், நியூ ஸ்டார்சிட்டி, மற்றும் பாலாஜி கார்டன், தணிகைநகர், வடகரை ஊராட்சிக்கு உட்பட்ட பாபா நகர் உள்ளிட்ட பகுதியில் சுமார் 2 ஆயிரம் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.
இதனால் வீடுகளுக்குள் ஏராளமானோர் தவித்து வருகிறார்கள். 2 நாட்களாகவே இங்குள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் வீடுகளுக்குள் முடங்கியிருந்தனர். வெள்ளம் வரும் என்ற அச்சத்தில் சிலர் வீடுகளை விட்டு வெளியேறி வேறு பகுதிக்கு சென்றனர். பலர் வீட்டு மாடிகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த சூழலில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் கடும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். அத்தியாவசிய தேவைகளுக்காக கூட வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே கால்வாய் நீருடன் அப்பகுதி தனியார் ஆலை கழிவுகளும், சாக்கடையும் கலந்து வருகின்றன.
மழை வெள்ளத்துடன் கழிவுநீரும் கலந்து வந்தததோடு பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளும் வீடுகளுக்குள் புகுந்தன.
குமரன் நகர் பகுதியில் தாழ்வான பகுதியில் இருந்த 15 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் அப்பகுதியில் 2 முதியவர்கள், 9 பெண்கள் உள்பட 25 பேர் தண்ணீரில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது. அவர்களால் வெளியில் வர முடியவில்லை. இதுபற்றி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. செங்குன்றம் தீயணைப்பு நிலைய அதிகாரி சீனிவாசன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்றனர்.
25 பேரையும் ரப்பர் படகு மூலம் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். பின்னர் அவர்கள் தீர்த்தங்கரை சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இதை தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு உள்ளிட்டவை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. வெள்ள பாதிப்பு குறித்து அப்பகுதியை சேர்ந்த மணி கூறுகையில், புழல் ஊராட்சி ஒன்றியத்தில் கால்வாய்கள், நீர்நிலைகள் உள்ளிட்ட பல்வேறு ஆக்கிரமிப்புகள் காரணமாக மழைநீர் கால்வாய் வழியாக செல்லாமல் ஊருக்குள் புகுந்து விடுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பலமுறை போராடியும் நடவடிக்கை இல்லை.
இதனால் ஆக்கிரமிப்புகள் அதிகளவில் நடைபெற்று உள்ளன. கடந்த ஆண்டுகளில் பெரிய மழை பெய்ததால் குடியிருப்புகளில் புகுந்த மழைநீர். இந்த ஆண்டு தொடர் மழையால் மழைநீர் புகுந்துள்ளது. புழல் ஊராட்சி ஒன்றியத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதால், சமூக ஆர்வலர்களும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நிரூபணம் ஆகியுள்ளது. ஆனால், ஆக்கிரமிப்பாளர்கள் மீது, அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் அரசுக்கு வருவாய் இழப்பும், இடர்பாடுகளும் தொடர்கின்றன.
மேலும் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான். இதுபோன்ற மழைக்காலங்களில் அதிகாரிகள் வெளியில் இருந்து பார்வையிட்டு செல்வது வழக்கமாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பாதிப்புக்குள்ளான இப்பகுதி மக்களுக்கு தீர்வும் கிடைக்கவில்லை.
மேலும் தற்போது பாதிக்கப்பட்டவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
புழல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் விளாங்காடுபாக்கம், தீர்த்த பிரியப்பட்டு, அழிஞ்சிவாக்கம், பிராண்ட்லைன் உள்ளிட்ட 7 ஊராட்சிகள் உள்ளன. இது சென்னையை ஒட்டிய புறநகர் கிராமப்பகுதிகள் ஆகும்.
சென்னை நகருக்குள் ஆண்டுதோறும் ஏற்பட்டு வரும் மழை வெள்ள பிரச்சனைகளால் சென்னை நகர்ப்பகுதிகளில் வாடகை வீடுகளில் வசிக்கும் பலர் புறநகர் பகுதிக்கு குடி பெயர்ந்தனர். புழல் ஊராட்சி ஒன்றிய பகுதியில் மட்டும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சார்பில் பிளாட்டுகள் அமைக்கப்பட்டு ஏராளமான புதுப்புது குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன.
இந்த நகரங்களில் பிளாட்டுகள் வாங்கி பலரும் வீடு கட்டி உள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் மட்டும் இந்த பகுதியில் 15-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உருவாகி உள்ளன. பல்வேறு தொழில் நிறுவனங்களும் தொடங்கப்பட்டு உள்ளன. வயல்வெளி பகுதிகள் குடியிருப்புகளாக மாறியது.
இப்பகுதியில் சுமார் 5 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இந்த பகுதியில் ஒரு பாசன் கால்வாய் செல்கிறது. புதிய குடியிருப்புகள், நிறுவனங்கள் அமைந்ததன் காரணமாக இந்த பாசன கால்வாய் ஆக்கிரமிப்பால் தூர்ந்து போனது.
கால்வாய் முறையாக பராமரிக்கப்படாததால் கால்வாயின் பெரும் பகுதி காணாமல் போய்விட்டது. சோழவரம் பகுதியில் இருந்து வரும் தண்ணீர் இந்த கால்வாய் மூலம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட வட பெரும்பாக்கம் வழியாக கடலுக்கு செல்கிறது. ஒவ்வொரு வருடமும் மழை காலங்களில் இந்த பகுதியில் வீடுகளை தண்ணீர் சூழ்வது வாடிக்கையாகிவிட்டது.
எனவே கால்வாயை முறையாக பராமரிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கடந்த அக்டோபர் மாதம் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இதனால் தற்காலிகமாக கால்வாய் சீரமைக்கப்பட்டது. இந்த சூழலில் தான் கடந்த 3 நாட்களாக பெய்துவரும் மழையினால் இந்த பகுதியை மீண்டும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
தாம்பரம் அருகில் உள்ள ஊரப்பாக்கத்தில் ஜெகதீசன்நகர், செல்வராஜ்நகர் உள்ளிட்ட இடங்களில் சுமார் 20 வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
பலத்த மழை காரணமாக திருமழிசை அருகே உள்ள மேப்பூர் மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் சுமார் 600 வீடுகளை மழை நீர் சூழ்ந்து உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள்.
அத்தியாவசியப் பொருட்கள் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு ஊராட்சியில் உள்ள விஷ்ணு பிரியா நகரில் 10 தெருக்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தவித்து வருகிறார்கள். பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொருட்கள் சேதம் அடைந்து உள்ளன.
மொத்தத்தில் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ள நீரை வடியவைக்கவும், மீட்பு நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன.






