என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கனமழை ஓய்ந்தது - நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மீண்டும் திறப்பு
    X

    கனமழை ஓய்ந்தது - நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மீண்டும் திறப்பு

    • கடந்த ஒரு வார காலமாக மழை கொட்டி வந்த நிலையில் நேற்று முதல் மழையின் அளவு குறைந்து விட்டது.
    • சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்ட தகவல் அறிந்ததும் நீலகிரிக்கு சுற்றுலாப் பயணிகள் வர தொடங்கினர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.

    கோடை விடுமுறையை கொண்டாடுவதற்காக வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் விதமாக நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி என பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படும். இந்த ஆண்டும் கோடைவிழா தொடங்கி நடைபெற்று வந்தது.

    சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் வந்து மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சியை கண்டு ரசித்தனர். இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்ய தொடங்கியது.

    தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் நீலகிரியில் உள்ள முக்கிய சாலைகளில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

    அத்துடன் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தொட்டபெட்டா காட்சிமுனை, பைக்காரா படகு இல்லம், அவலாஞ்சி, சூட்டிங் மட்டம் உள்பட 10க்கும் மேற்பட்ட சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன.

    தொடர் மழையாலும், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதாலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தங்கள் சொந்த ஊர் திரும்பினர்.

    இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக மழை கொட்டி வந்த நிலையில் நேற்று முதல் மழையின் அளவு குறைந்து விட்டது.

    மழை குறைந்ததை தொடர்ந்து 4 நாட்களுக்கு பிறகு ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, பைக்காரா படகு இல்லம், ஊட்டி படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டது. பலத்த காற்று வீசுவதால், வனத்துறை கட்டுப்பாட்டில் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்கள் மட்டும் திறக்கப்படவில்லை. குன்னூர் பகுதியில் மழை ஓய்ந்ததால் அங்குள்ள லேம்ஸ்ராக் காட்சி முனை, டால்பின்நோஸ் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டன.

    சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்ட தகவல் அறிந்ததும் நீலகிரிக்கு சுற்றுலாப் பயணிகள் வர தொடங்கினர்.

    அவர்கள் ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கிய மலர்களை கண்டு ரசித்தனர். படகு இல்லத்தில் 6 நாட்களுக்கு பிறகு நேற்று படகு சவாரி தொடங்கியது. படகு இல்லத்திற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.

    இன்றும், நாளையும் வார விடுமுறை நாட்கள் என்பதால் ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மழை நின்றதாலும், சுற்றுலா தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் வர ஆரம்பித்துள்ளதால் சுற்றுலாவை நம்பி உள்ள தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×