என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நீலகிரியில் மழை நீடிப்பு: சுற்றுலா தலங்கள் 2-வது நாளாக மூடல்
    X

    நீலகிரியில் மழை நீடிப்பு: சுற்றுலா தலங்கள் 2-வது நாளாக மூடல்

    • கனமழை பெய்துவரும் பகுதிகளில் தேசிய-மாநில பேரிடர் குழுவினர் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • அவசர காலங்களில் உதவி தேவைப்பட்டால் 1077 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    ரோட்டோரம் நின்ற மரங்கள் பல இடங்களில் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்ப ட்டது.

    தீயணைப்பு வீரர்களும், மீட்பு படையினரும் சம்பவ இடங்களுக்கு சென்று மரங்களை அகற்றி வருகிறார்கள். ஊட்டி-எமரால்டு சாலையில் ஒரு ராட்சத மரம் வேரோடு சாய்ந்து உயர் அழுத்த மின்கம்பம் மீது விழுந்தது. இதன்காரணமாக மஞ்சனகோரை, முத்தோரை பாலாட், முள்ளிக்கூரை, கப்பத்துறை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. இரவில் அந்த கிராமங்கள் இருளில் மூழ்கின.

    சேரம்பாடி-சுல்தான் பத்தேரி சாலையில் கப்பாலா பகுதியில் நள்ளிரவு சாலையோரம் இருந்த பலாமரம் சாலையின் குறுக்கே சாய்ந்து மின் கம்பங்கள் மீது விழுந்தது. இதில் மின் கம்பிகள் அறுந்து மின் தடை ஏற்பட்டது. குந்தலாடி அருகே சாலையோர மரத்தின் கிளைகள் மின்கம்பியில் முறிந்து விழுந்ததது. இதில் அந்த பகுதியில் மின்வினியோகம் துண்டிக்கப்பட்டது.

    சேரங்கோடு அருகே சின்கோனா பகுதியில் சாலையோர மின்கம்பம் சாய்ந்து மின்கம்பிகள் சாலையில் விழுந்தன. அப்போது அந்த வழியாக காரில் சென்ற பாரதிராஜா என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இதேபோல மாவட்டத்தின் பல இடங்களில் மின் கம்பங்கள் மீது மரம் விழுந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. கார், ஆட்டோக்கள் மீது மரம் விழுந்ததால் வாகனங்களும் சேதம் அடைந்தன.



    கூடலூர் அருகே பாண்டியாறு பகுதியில் உள்ள டேன் டீ தொழிலாளா் குடியிருப்பு சேதமடைந்தது. அந்த குடியிருப்பில் யாரும் இல்லாததால் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது.

    தேவாலா, பாண்டியார் டான்டீ, தொழிலாளர்கள் குடியிருப்பில் சிவன் என்பவரின் வீட்டு சுவர் இரவில் இடிந்து சேதம் அடைந்தது.

    கூடலூர், பந்தலூர் பகுதியில் தொடர்ச்சியாக பலத்த காற்றுடன் மழை பெய்வதால் பந்தலுார் தாசில்தார் சிராஜூநிஷா, சமூக பாதுகாப்பு திட்டம் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் வாசுதேவன் மற்றும் கவுரி தலைமையிலான அதிகாரிகள் கண்காணிப்பு மற்றும் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தொடர் மழையால் நீலகிரி மாவட்ட சுற்றுலா தலங்கள் நேற்று மூடப்பட்டு இருந்தன. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தொட்டபெட்டா காட்சி முனை, அவலாஞ்சி, பைன் பாரஸ்ட், கேரன்ஹில் ஆகிய சுற்றுலா தலங்கள் 2-வது நாளாக இன்றும் தற்காலிகமாக மூடப்படுவதாக மாவட்ட வன அலுவலர் தெரிவித்து உள்ளார்.

    நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்துவரும் பகுதிகளில் தேசிய-மாநில பேரிடர் குழுவினர் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவசர காலங்களில் உதவி தேவைப்பட்டால் 1077 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

    Next Story
    ×