என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஏற்காட்டில் சாரல் மழை- பனி மூட்டம்: சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
    X

    ஏற்காட்டில் சாரல் மழை- பனி மூட்டம்: சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

    • ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.
    • முக்கிய இடங்களில் கூடி இயற்கை அழகை ரசித்து வருகிறார்கள். மேலும் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

    சேலம்:

    ஃபெஞ்சல் புயல் காரணமாக சேலம் மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடர்ந்து கனமழை பெய்தது.

    இதனால் ஏற்காடு மலை பாதையில் பல்வேறு பகுதிகளிலும் நீர் வீழ்ச்சி ஏற்பட்டு தண்ணீர் அருவியாக தற்போது வரை கொட்டி வருகிறது. ஏற்காடு உள்பட மாவட்டம் முழுவதும் வெயிலின் தாக்கம் குறைந்து மேகமூட்டத்துடன் காட்சி அளிப்பதுடன் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

    தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை என்பதால் ஏழை மக்களின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.

    இந்த நிலையில் ஏற்காட்டில் நேற்று பகல் முழுவதும் சாரல் மழை பெய்தது. இரவில் பனி பொழிவும் அதிக அளவில் இருந்தது. இதனால் ஏற்காட்டில் கடும் குளிர்ச்சி நிலவி வருகிறது. ஏற்காட்டில் நேற்று சாரல் மழையில் நனைந்த படி படகு குழாமில் குடும்பத்தினருடன் படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள் இன்றும் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்து வருகிறார்கள்.

    மேலும் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள அண்ணா பூங்கா, மான் பூங்கா, பக்கோடா பாயிண்ட், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், சேர்வராயன் மலை கோவில், கிளியூர் நீர்வீழ்ச்சி உள்பட அனைத்து பகுதிகளிலும் குவிந்துள்ளனர்.

    இன்றும் காலை முதலே இருசக்கர வாகனங்கள், கார்கள், பஸ்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு அதிக அளவில் சென்று வருகிறார்கள். அவர்கள் அங்குள்ள முக்கிய இடங்களில் கூடி இயற்கை அழகை ரசித்து வருகிறார்கள். மேலும் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

    ஏற்காட்டில் இன்று காலையில் அதிக அளவில் பனி மூட்டம் நிலவியதால் ஏற்காடு மலைப்பாதையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்ட படியே ஊர்ந்து செல்கின்றன. மேலும் ஏற்காடு மலையின் மேல் பகுதியில் மரம், செடி கொடிகளிலும் பனி படர்ந்து வெள்ளை நிறத்தில் முத்து போல காட்சி அளிக்கிறது.

    2 வாரங்களுக்கு பிறகு ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் அங்குள்ள கடைகளிலும் வியாபாரம் களை கட்டியுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×