என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தற்கொலைகளின் தலைநகராக தமிழ்நாடு உள்ளது - ஆளுநர் ஆர்.என்.ரவி
- ஆங்கிலேயர் ஆட்சி காலத்திற்குப் பிறகு தொடர்ந்து பாரதத்தின் தொன்மையான வேதங்கள் மற்றும் அது சார்ந்த கருத்துக்கள் அழிக்கப்பட்டன.
- மனிதர்கள் மன அழுத்தத்தினாலும் பிரிவினைகளாலும் பல்வேறு பாதிப்புகளை சந்திக்கின்றனர்.
கோவை:
'சிந்து சரஸ்வதி நாகரிகம் மாநாடு' கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இன்றும், நாளையும் நடக்கிறது. இன்றைய மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கிவைத்து பேசினார். அவர் கூறியதாவது:-
உலக அளவில் நதிகளின் கரைகளில் தான் நாகரிகங்கள் உருவாகின. நதிகள் அழியும்போது நாகரிகங்களும் மறைந்தன. அதேபோல், பாரதத்தின் தொன்மையான நாகரிகமும், சரஸ்வதி நதிக்கரையோரம் தான் உருவானது. காலப்போக்கில் சரஸ்வதி நதி அழியும்போது நாகரிகமும் மறைந்தது. ஆனால் அதன் தாக்கம் நாடு முழுவதும் உள்ளது.
சரஸ்வதி நதிக்கரையோரம் உருவான நாகரிகத்தில், உலகின் பிற நாகரிகங்களைப் போல கட்டுமான கலை, மக்கள் குடியிருப்பு ஆகியவை இருந்தபோதும், இதன் தனித்துவமாக அறிவு சார்ந்த விஷயங்கள் மற்றும் வேதங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்திற்குப் பிறகு தொடர்ந்து பாரதத்தின் தொன்மையான வேதங்கள் மற்றும் அது சார்ந்த கருத்துக்கள் அழிக்கப்பட்டன. இருந்தபோதும், ராமாயணம் மகாபாரதம் ஆகியவற்றின் கருத்துக்கள் பாரதத்தின் அனைத்து பகுதிகளிலும், பல்வேறு இலக்கியங்களிலும் உள்ளது. குறிப்பாக தமிழ் சங்க இலக்கியங்களான அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றில் ராமாயணத்தின் சம்பவங்களும் உள்ளன.
இவ்வாறு சரஸ்வதி நதிக்கரையில் உருவான நாகரிகமும் அங்கு உருவாக்கப்பட்ட தத்துவங்களும் மொழிகளைக் கடந்து இனங்களை கடந்து பாரதம் முழுவதும் பரவியுள்ளது. பாரதம் மட்டுமின்றி உலகத்திற்கே அந்த கருத்துக்கள், தத்துவங்கள் இன்று தேவைப்படுகின்றன. இந்த உலகின் அனைத்து படைப்புகளும் ஒன்று என்பது நமது வேதங்களின் அடிப்படையாகும்.
உலக அளவில் இனம், மதம் காரணமாக பல போர்கள் நடைபெறுகிறது. மனிதர்கள் மன அழுத்தத்தினாலும் பிரிவினைகளாலும் பல்வேறு பாதிப்புகளை சந்திக்கின்றனர். தற்கொலை செய்து கொள்கின்றனர். குறிப்பாக தேசிய குற்ற ஆவணத்தின் விவரப்படி தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 20 ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். மன அழுத்தத்தால் தற்கொலை அதிகரித்து உள்ளது. நாள் ஒன்றுக்கு 65 பேர் தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்கொலைகளின் தலைநகராக தமிழகம் உள்ளது.
அந்த வகையில் மனித வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் இவ்வுலகின் அனைத்து உயிர்களும் ஒன்று என்பதை வலியுறுத்தும் பாரதத்தின் உன்னத கலாச்சாரங்களையும், தத்துவங்களையும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
அதைத்தான் பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாட்டின் வளர்ச்சியோடு இழந்த நமது கலாச்சாரத்தையும் மறைக்கப்பட்ட தத்துவங்களையும் மீட்டெடுத்து அவற்றுக்கு புது சக்தியை கொடுத்து வருகிறது. நமது நாடு சர்வதேச அளவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் மட்டுமின்றி ஆன்மீக ரீதியாகவும், கலாசார ரீதியாகவும் பல தடைகளையும் கடந்து வளர்ந்து வருகிறது.
ஆரியம், திராவிடம் என பலரும் பிரிக்க நினைத்தாலும் அவர்கள் தோற்றுப் போவார்கள். காரணம் அவர்களிடம் இருப்பது பொய்யான கருத்துக்கள் தான். அந்த வகையில் சரஸ்வதி நதி நாகரிகம் மற்றும் அதன் சிறப்பை இது போன்ற மாநாட்டின் மூலம் எடுத்துரைத்து அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டியது அவசியமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.






