என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பருவமழையை வரவேற்கும் வகையில் நடந்த மீன்பிடி திருவிழா
- கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் பரவலாக மழை பெய்ததை அடுத்து குளம் நிரம்பி வருகிறது.
- பல்வேறு கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் குளத்தில் இறங்கி மீன்களை பிடித்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ளது அணைப்பட்டி கிராமம். இங்கு 50 ஏக்கர் பரப்பளவில் பிரம்மசமுத்திரம் குளம் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து குடகனாறு மூலம் வரும் தண்ணீர் இந்த குளத்தில் சேகரிக்கப்படுகிறது. இதன் மூலம் இந்த சுற்றுவட்டார கிராமத்தில் 1000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகின்றன. தென்னை, வாழை, நெல் உள்ளிட்ட விவசாயம் நடந்து வருகிறது. இந்த குளத்தில் வருடந்தோறும் மீன் பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இதனை அடுத்து கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைகளில் பரவலாக மழை பெய்ததை அடுத்து குளம் நிரம்பி வருகிறது.
இந்நிலையில் இன்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது. பிரம்மசமுத்திர கரையில் உள்ள கன்னிமார் தெய்வம், கூத்த அப்புச்சி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பிரம்ம சமுத்திரம் ஆயக்கட்டு தலைவர் பழனிசாமி கொடியசைத்து மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தார்.
இதில் அணைப்பட்டி, கொட்டப்பட்டி, கோட்டூர் ஆவாரம்பட்டி, அனமந்தராயன் கோட்டை, மயிலாப்பூர், பாலம் ராஜாபட்டி, குட்டத்துப்பட்டி, கோமையன்பட்டி, புகையிலை பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் குளத்தில் இறங்கி மீன்களை பிடித்தனர்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வலை வீசியும், கூடைகளை பயன்படுத்தி மீன்களை உற்சாகமாக அள்ளி சென்றனர். கட்லா, ஜிலேபி கெண்டை, விரால், மிருகாள், ரோகு, அவுரி, தேளி விரால் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மீன்கள் வலையில் சிக்கியது.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொன் முருகன் கூறுகையில், பிரம்ம சமுத்திரகுளம் மூலம் 1500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி அடைந்து வருகிறது. தென்மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை தொடங்குவதை வரவேற்கும் வகையில் மீன்பிடித் திருவிழா நடத்தப்பட்டது. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பாரம்பரியமாக மீன்பிடி திருவிழா நடத்தப்படுகிறது. 18 பட்டி சுற்றுவட்டாரத்திலிருந்து ஜாதி, மத பேதமின்றி அனைவரும் இதில் ஒற்றுமையுடன் கலந்து கொண்டனர் என்றார்.






