என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வரட்டுப்பள்ளம் அணையில் மீன்பிடிக்க அனுமதி கேட்டு மீனவர்கள் போராட்டம்
    X

    வரட்டுப்பள்ளம் அணையில் மீன்பிடிக்க அனுமதி கேட்டு மீனவர்கள் போராட்டம்

    • முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர், தாசில்தார், மீன்வளத்துறை உள்ளிட்டோருக்கு மனு அளித்தனர்.
    • இதுவரை எந்த அறிவிப்பும் வராததால், வீடுகளில் கருப்புக்கொடி கட்டி அறவழிப் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் 100-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் உள்ளன. சுமார் 600 உறுப்பினர்களை கொண்ட, பெஸ்தவர் மீனவர் சங்கத்தின் மூலம், அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை மற்றும் சுற்று வட்டார ஏரிகளில் மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

    அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் மீன்பிடிக்கும் உரிமம், கடந்த மாதம் 22ம் தேதியோடு முடிவடைந்தது.

    இந்நிலையில், தந்தை பெரியார் உயிரின சரணாலயத்துக்குள் வரட்டுப்பள்ளம் அணை இருப்பதாக கூறி, மாவட்ட வனத்துறையினர், மீன்பிடிக்க திடீரென அனுமதி மறுத்தனர்.

    இதனால் வரட்டுப்பள்ளம் அணையில் மீனவர்கள் மீன் பிடிக்க முடியாத சூழ்நிலையால், அவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழியில்லை எனக்கூறி, முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர், தாசில்தார், மீன்வளத்துறை உள்ளிட்டோருக்கு மனு அளித்தனர்.

    மனு சம்பந்தமாக எந்தவிதமான, நடவடிக்கையும் இல்லாததால், கடந்த 25-ந்தேதி, குடும்பத்துடன் ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்.

    இதையடுத்து, மீன்வளத்துறை இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, தாசில்தார் கவியரசு, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில், தாலுகா அலுவலகத்தில், மீனவர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில், இரண்டு நாட்களில் மீன்பிடிக்க அனுமதி வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதால், போராட்டத்தை மீனவர்கள் தற்காலிமாக கைவிட்டனர். ஆனால், இதுவரை எந்த அறிவிப்பும் வராததால், வீடுகளில் கருப்புக்கொடி கட்டி அறவழிப் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

    அதன்படி, இன்று காலை, அந்தியூரில் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட மீனவர்களின் வீடுகளில் கருப்புக்கொடி கட்டியும், 50-க்கும் மேற்பட்டோர் கொடியை கையில் ஏந்தியும் போராட்டம் நடத்தினர்.

    மீனவர்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×